இந்தியா

‘ராகுல் காந்தியின் இடஒதுக்கீடு கொள்கை பாசாங்குத்தனமானது’ - மாயாவதி குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: காங்கிரஸ் மற்றும் ராகுல் காந்தியின் இடஒதுக்கீடு கொள்கை பாசாங்குத்தனமானது, ஏமாற்றும் நோக்கம் கொண்டது என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவுகளில், “காங்கிரஸ் மற்றும் ராகுல் காந்தியின் எஸ்சி / எஸ்டி / ஓபிசி-க்களுக்கான இடஒதுக்கீடு குறித்த கொள்கை தெளிவாக இல்லை. மாறாக, பாசாங்குத்தனமும், ஏமாற்றும் நோக்கமும் கொண்டதாக உள்ளது. வாக்குகளைப் பெற உள்நாட்டில் இடஒதுக்கீட்டை அக்கட்சி ஆதரிக்கிறது. இடஒதுக்கீட்டை 50% க்கு மேல் அதிகரிக்க வேண்டும் என்றும் வாதிடுகிறது. ஆனால், வெளிநாடுகளுக்குச் செல்லும்போது இடஒதுக்கீட்டை ரத்து செய்வது பற்றி பேசுகிறார்கள். இவர்களின் இரட்டை வேடத்தை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

ஓபிசி இடஒதுக்கீடு தொடர்பான மண்டல் கமிஷன் அறிக்கையை காங்கிரஸ் அரசு அமல்படுத்தவில்லை என்பது உண்மை. எஸ்சி / எஸ்டி பிரிவினருக்கான பதவி உயர்வில் இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்காக நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட அரசியலமைப்பு திருத்த மசோதாவை காங்கிரஸ் அனுமதிக்கவில்லை. அது இன்னும் நிலுவையில் உள்ளது.

இடஒதுக்கீட்டுக்கு எதிரானது காங்கிரஸ் கட்சி என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும். மத்தியில் ஆட்சியில் இருக்கும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தாமல், ஆட்சியில் இருந்து விலகி இப்போது குரல் எழுப்புகிறது காங்கிரஸ். இது கபட நாடகம் இல்லையா?” என குற்றம் சாட்டியுள்ளார்.

SCROLL FOR NEXT