திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்தப்பட்டதற்கு பரிகாரமாக நேற்று மகா சாந்தி ஹோமம் நடத்தப்பட்டது. இதையடுத்து கோயில் லட்டு தயாரிப்பு கூடத்தில் புனித நீர் தெளித்த புரோகிதர். படம்: பிடிஐ 
இந்தியா

லட்டு பிரசாதம் கலப்படம் எதிரொலி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாந்தி ஹோமம்

என். மகேஷ்குமார்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு பிரசாதம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யில் மாடு, பன்றி கொழுப்புகள், மீன் எண்ணெய் கலப்படம் செய்யப்பட்ட தரமற்ற நெய் கடந்த ஆட்சியில் உபயோகப்படுத்தப்பட்டதாக ஆந்திர முதல்வர் சந்திராபாபு நாயுடு பகிரங்கமாக குற்றம்சாட்டினார். அதற்கான ஆதாரங்களையும் அவர் வெளியிட்டார்.

இந்நிலையில், கலப்பட நெய்யினால் லட்டு பிரசாதம் உட்பட மேலும் சில பிரசாதங்கள் தயாரிக்கப்பட்டு அவை விநியோகம் செய்யப்பட்டதால், கோயிலில் பரிகார தோஷ பூஜைகள் நடத்துவது நல்லது என ஆகம வல்லுனர்கள் கருத்து தெரிவித்ததால், நேற்று காலை, தேவஸ்தான தலைமை அர்ச்சகர் வேணுகோபால தீட்சிதர் தலைமையில் திருமலையில் உள்ள யாக சாலையில் சாந்தி ஹோமம் நடந்தது. இதில், வைகானச ஆகம விதிகளின்படி, சங்கல்பம், விஸ்வகேசவர் ஆராதனை, புண்யாவச்சனம், வாஸ்து ஹோமம், கும்பம் பிரதிஷ்டை, பஞ்சகாவ்ய ஆராதனை போன்றவை நடத்தப்பட்டது. கோயிலின் மடப்பள்ளி, மாட வீதிகள் மற்றும் கோயிலுக்குள் உள்ள அனைத்து சன்னதிகள், கொடிமரம், பலிபீடம் ஆகிய இடங்களில் வாஸ்து சுத்தி மற்றும் பஞ்சகாவ்ய கும்ப ஜல சம்ப்ரோக்ஷணம் ஆகியவை நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து சுவாமிக்கு விசேஷ நைவேத்தியம் படைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமள ராவ் செய்தியாளர்களிடம் கூறும்போது, "சாந்தி ஹோமம் வாயிலாக அனைத்து தோஷங்களும் விலகின. நடந்து முடிந்த பவித்ர உற்சவத்துக்கு முன்பாகவே நந்தினி நெய்யை உபயோகிக்க தொடங்கி விட்டோம்.

ஆதலால், லட்டு பிரசாதம்விவகாரத்தில் பக்தர்களுக்கு எவ்வித சந்தேகங்களும் வேண்டாம். புதிதாக வாங்கப்பட்ட நெய்யில்தான் தற்போதுஅனைத்து நைவேத்தியங்களும், பிரசாதங்களும் தயாரிக்கப்படுகின்றன. சாந்தி ஹோமத்தால் தெரிந்தோ, தெரியாமலோ நடந்த தோஷங்கள் விலகிவிட்டன" என்றார்.

ஏஆர் நிறுவனத்துக்கு நோட்டீஸ்: திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு கலப்பட நெய்யை அனுப்பி வைத்த திண்டுக்கல் ஏஆர்டெய்ரி நிறுவனத்துக்கு மத்திய சுகாதார துறை நேற்று நோட்டீஸ் அனுப்பியது.

SCROLL FOR NEXT