ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டங்கள், விருதுகளின் பெயர்களை மாற்ற தேசிய ஜனநாயக கூட்டணி அரசு திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து `தி இந்து'விடம் மத்திய அரசு அதிகாரிகள் வட்டாரங்கள் கூறியதாவது: ‘கடந்த ஆட்சியில் நேரு குடும்பத்தினர் பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டு மக்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கும் மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் விருதுகளின் பெயர்களை மாற்றி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. உதாரணமாக ‘இந்திரா ஆவாஜ் யோஜ்னா’ திட்டம் ‘ராஷ்டிரிய கிராமின் ஆவாஜ் யோஜ்னா’ என மாற்றப்பட உள்ளது’ என தெரிவித்துள்ளனர்.
ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது
விளையாட்டு வீரர்களுக்காக மத்திய அரசு அளித்து வந்த ’ராஜீவ் காந்தி கேல் ரத்னா’ விருதை புதிதாக பதவி ஏற்ற தேசிய ஜனநாயக கூட்டணி அரசு இந்த வருடம் யாருக்கும் வழங்கவில்லை. இதற்காக பரிந்துரைக்கப்பட்ட ஏழு விளையாட்டு வீரர்களில் தகுதியானவர்கள் யாரும் இல்லை என முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் தலைமையிலான குழு தெரிவித்துள்ளது.
விளையாட்டு வீரர்களுக்காக வழங்கப்படும் அர்ஜுனா, துரோணாச்சார்யா, தயான்சந்த் மற்றும் ராஷ்டிரிய கேல் புரோத்சஹான் ஆகிய அனைத்திலும் உயரிய விருதாக ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது கருதப்படுகிறது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பெயரில் 1991-ல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த விருது மூன்றாவது முறையாக யாருக்கும் அறிவிக்கப்பட வில்லை. இந்த விருதின் பெயர் மாற்றப்படுவதுடன் அதன் விதிமுறைகளிலும் நரேந்திர மோடி அரசு சில மாற்றங்களை செய்ய இருப்பதாகக் கூறப்படுகிறது.