பிரதிநிதித்துவப்படம் 
இந்தியா

தன்னுடைய நினைவுப் பரிசுகளை ஏலம் எடுக்க பொதுமக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: பல்வேறு நிகழ்வுகளில் தனக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகளை ஏலத்தில் எடுக்குமாறு பிரதமர் மோடி பொதுமக்களுக்கு இன்று (வியாழக்கிழமை) வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு பொதுநிகழ்வுகளில் எனக்கு வழங்கப்பட்ட நினைவுப்பரிசுகளை நான் ஏலத்தில் விடுவது வழக்கம். ஏலத்தின் மூலம் கிடைக்கும் வருமானம் ‘நமாமி கங்கே’ முயற்சிக்குச் செல்கிறது.

இந்த ஆண்டுக்கான ஏலம் தொடங்கி விட்டது என்பதை பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்வு அடைகிறேன். உங்களுக்கு சுவாரஸ்யம் தரும் நினைவுப் பரிசுகளை ஏலத்தில் எடுக்குமாறு உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

‘நமாமி கங்கே’ என்பது, கங்கை நதியை பாதுகாக்கும் மற்றும் மீட்டெடுக்கும் அரசு சார்ந்த முன்முயற்சியாகும்.

பிரதமரின் நினைவு பரிசுகள் ஏலம் விலை ரூ.600-ல் தொடங்கி ரூ.8.26 லட்சம் வரை இருக்கிறது. கடந்த ஓராண்டாக, பிரதமர் மோடி பெற்ற நினைவு பரிசுகளின் ஏலம் அவரது பிறந்தநாளில் தொடங்கியது. வரும் அக்டோபர் 2-ம் தேதி வரை இந்த ஏலம் நடைபெறுகிறது. சுமார் 600 பொருட்கள் ஏலத்தில் விடப்படப்படுவதாகத் தெரிகிறது.

SCROLL FOR NEXT