இந்தியா

20 ஆண்டுகளுக்குப் பிறகு லாலு - நிதிஷ் ஒரே மேடையில் பிரச்சாரம்

செய்திப்பிரிவு

பிஹாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவர் லாலு பிரசாத் யாதவும், முன்னாள் முதல்வர் நிதிஷ்குமாரும் திங்கள்கிழமை ஒரே மேடையில் பிரச்சாரம் மேற்கொண்டனர்.

அரசியல் எதிரிகளாக இருந்த இவர்கள், 20 ஆண்டு களுக்குப் பிறகு தேர்தலில் கைகோர்த்துள்ளனர்.

பிஹாரில் 10 தொகுதிகளுக் கான சட்டமன்ற இடைத் தேர்தல் வரும் 21-ம் தேதி நடைபெற வுள்ளது. இந்நிலையில் வைசாலி மாவட்டம், ஹாஜிபூரில் நடை பெற்ற பொதுக்கூட்டத்தில் இரு தலைவர்களும் பங்கேற்று, தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி வைத்தனர்.

பாட்னாவில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள ஹாஜிபூர் மைதானத்தில் ஏராளமான தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் காலை முதற்கொண்டே திரண்டிருந்தனர்.

ஆர்.ஜே.டி. மாநிலத் தலைவர் ராம்சந்திர பூர்வே கூறும்போது, “ஹாஜிபூரை தொடர்ந்து மொஹியுதீன் நகரில் இரு தலைவர்களும் இணைந்து பிரச்சாரம் செய்வார்கள். இதன் பிறகு வரும் 17-ம் தேதி நர்கடியாகஞ்ச், மொஹானியா, சாப்ரா ஆகிய இடங்களில் இருவரும் ஒன்றாக பிரச்சாரம் செய்வார்கள்” என்றார்.

1991 மக்களவைத் தேர்தலில் லாலுவும் நிதிஷும் இணைந்து பிரச்சாரம் செய்தனர். அப்போது நிதிஷ்குமார் பார்ஹ் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

பிஹாரில் ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான ஆளும் கூட்டணியில் ராஷ்ட்ரீய ஜனதா தளமும் காங்கிரஸும் இணைந்துள்ளன. வரும் இடைத் தேர்தலில் இக்கூட்டணி பாஜக வுக்கு எதிராக போட்டியிடுகிறது.

இக்கூட்டணி ஜூலை 30-ம் தேதி அறிவிக்கப்பட்டது. வகுப்பு வாத கட்சிகளை தோற்கடிக்க, மதச்சார்பற்ற சக்திகளை வலுப் படுத்துவது அவசியம் என்று இக்கூட்டணியின் தலைவர்கள் கூறினர்.

ஐக்கிய ஜனதா தளமும் ராஷ்ட்ரீய ஜனதா தளமும் 1994-ல் பிரிந்தன. கடந்த மக்களவைத் தேர்தலில் பிஹாரில் பாஜகவின் வெற்றியை தொடர்ந்து இக்கட்சிகள் மீண்டும் ஒன்றுசேர்ந்துள்ளன.

SCROLL FOR NEXT