ஆர்எஸ்எஸ், பாஜகவில் உள்ள 2 அல்லது 3 பேருக்காக இந்த நாடே அடிமையாகிக் கிடந்து பணி செய்து வருகிறது. இதை எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து எதிர்க்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தினார்.
டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் ஓபிசி அமைப்பின் சார்பில் மாநாடு தல்கத்தோரா அரங்கில் இன்று நடந்தது. இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றார்.
அப்போது அவர் பேசியதாவது:
''இந்த நாடே தற்போது, ஆர்எஸ்எஸ், பாஜகவில் உள்ள மூன்று, நான்கு பேருக்கு அடிமையாகி சேவை செய்துவருகிறது. எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒரே தளத்தில் ஒற்றுமையாக இணைந்து இவர்களை எதிர்க்க வேண்டும். அடுத்த 6 முதல் 8 மாதங்களிலோ எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்து உருவெடுக்கும் சக்தியை நீங்கள் பார்க்கலாம்.
இந்தியாவைக் குறிப்பிட்ட இரண்டு, மூன்று நபர்களால் ஆள முடியாது என்பதை விரைவில் தெரிந்து கொள்வார்கள். முலாயம் சிங், லாலுபிரசாத் யாதவ் போன்ற மாநிலத்தில் வலிமை வாய்ந்த தலைவர்களை இழந்துவிட்டோம். இவர்கள் 90 களில் மிகச்சிறந்த வாக்குவங்கிகளை வைத்திருந்தனர். அடுத்து வரும் நாடாளுமன்ற, சட்டப்பேரவைத் தேர்தலில் ஓபிசி பிரிவினருக்கு உரிய பிரதிநிதித்துவம் தரப்படும்.
மத்தியில் ஆளும் பாஜக அரசில் விவசாயிகள் நலன் புறந்தள்ளப்பட்டுவிட்டது. அவர்களுக்கு வங்கிகளில் கடன் கிடைப்பதில்லை. அதேசமயம், 15 பெரிய தொழிலதிபர்களுக்கு ரூ.2.50 லட்சம் கோடிவரை கடன் தள்ளுபடி செய்திருக்கிறது மோடி அரசு. ஆனால், விவசாயிகளுக்குக் கடனும் தருவதில்லை, கடன் தள்ளுபடியும் தருவதில்லை, இதனால், அவர்கள் தற்கொலை செய்யும் எண்ணம் தொடர்ந்து வருகிறது. அவர்களின் குடும்பத்தினரும், குழந்தைகளும் கண்ணீருடன் வாழ்ந்து வருகிறார்கள்.
வங்கிகளின் வாராக்கடன், செயல்படா சொத்துகள் மதிப்பு ரூ. ஆயிரம் கோடியாக உயர்ந்துவிட்டது. நாட்டில் திறமையாக இருக்கும் மக்களுக்கு இந்த அரசு மதிப்பளிப்பதில்லை. விவசாயிகள் கடினமாக உழைக்கிறார்கள், ஆனால், பிரதமர் அலுவலகம் அவர்களைக் கண்டுகொள்வதில்லை. உழைப்பவர்களை ஒரு சிலர் உறிஞ்சி வாழ்கிறார்கள். சிறு தொழில் செய்பவர்களுக்கும், விவசாயிகளுக்கும் கடன் கொடுக்க வங்கிகள் தங்கள் கதவுகளைத் திறப்பதில்லை.''
இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்