தெலங்கானா மாநிலம் நல கொண்டா மாவட்டத்தில் கோழி கொத்தியதில் 8 மாத பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
நலகொண்டா மாவட்டம், முனு கோடு மண்டலம் லட்சுமிதேவ கூடம் கிராமத்தைச் சேர்ந்த கோம் பல்லி சைது, கீதா தம்பதியின் ஒரே மகள் ஜானவி (8 மாதம்). இவர்கள் வீட்டில் ஆடு, மாடு, கோழி ஆகியவற்றை வளர்த்து வருகின்றனர்.
கடந்த வியாழக்கிழமை கோம் பல்லி சைது, தனது நிலத்துக்குச் சென்றுள்ளார். இவரது மனைவி கீதா வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். குழந்தை ஜானவி தரையில் விளையாடிக் கொண் டிருந்தாள். அப்போது வீட்டில் வளரும் கோழி ஒன்று திடீரென வந்து ஜானவியின் தலையில் கொத்தியது. வலி தாங்க முடியாமல் குழந்தை அழுதது.
உடனடியாக கீதா வந்து பார்த்த போது குழந்தையின் தலையில் ரத்தம் வந்து கொண்டிருந்தது. உடனடியாக குழந்தையை அருகில் உள்ள தனியார் மருத்துவ மனைக்குக் கொண்டு சென்றனர். பின்னர் நலகொண்டா அரசு மருத்துவமனைக்கும், ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கும் கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி குழந்தை ஜானவி ஞாயிற்றுக்கிழமை இரவு பரிதாப மாக உயிரிழந்தாள்.
செல்லப் பிராணிகளிடம் ஜாக்கிரதை
சித்தூர் மாவட்ட கால்நடைத்துறை துணை இயக்குநர் டாக்டர் ராஜசேகர் கூறியதாவது: நாய், பூனை, கோழி, சேவல் ஆகிய செல்லப் பிராணிகளிடம் அதிகமாக குழந்தைகள்தான் விளையாடுவர். சில நேரங்களில் அவைகளை குழந்தைகள் அடிப்பதும் உண்டு. குழந்தைகளின் இந்த செயல் அவைகளை கோபமடையச் செய்யும். எனவே, வளர்ப்பு பிராணிகளிடம் பாசமாக இருந்தாலும் ஜாக்கிரதையாக பழக வேண்டும்.
நலகொண்டா பகுதியில் நடந்த சம்பவம் வேதனைக்குரியது. கோழி இனங்களில், சண்டை சேவல்கள்தான் ஆக்ரோஷமாக வளர்க்கப்படுகின்றன. இதனால் அவைகளிடம் குழந்தைகள் ஜாக்கிரதையாக பழகுவது அவசியம் என்று கூறினார்.