லக்னோ: உத்தர பிரதேசம் பஹ்ரைச் வனப்பகுதி வாழ் மக்கள் கடந்த 2 மாதங்களாக ஓநாய்களைக் கண்டுநடுநடுங்கிக் கொண்டிருக்கின்றனர். காரணம், இந்த காட்டுக்குள் உலாவும் ஓநாய்கள் 45 நாட்களில் 6 குழந்தைகள் உள்பட 8 பேரை கடித்துக் குதறிக் கொன்றுவிட்டன. 15 பேர் படுகாயமடைந்துள்ளனர். இது குறித்து வனத்துறையிடம் உள்ளூர் மக்கள் புகார் அளித்தனர்.
இதனையடுத்து, முதல்வர் யோகி ஆதித்யநாத் சம்பவ இடத்தை பார்வையிட வனத்துறை அமைச்சர் அருண் குமார் சக்சேனாவுக்கு உத்தரவிட்டார். அமைச்சரின் மேற்பார்வையில் 25 வனத்துறை குழுக்கள், 72 மணி நேர தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஓநாய்களின் நடமாட்டத்தை கண்காணிக்க கேமராக்கள் பொருத்தப்பட்ட 3 டிரோன்கள் பயன்படுத்தப்பட்டன. இந்நிலையில், கடந்த புதன் காலை 9:30 மணி அளவில் பஹ்ரைச் வனப்பகுதிக்கு உட்பட்டசிசியா கிராமத்தில் உள்ள கரும்புத்தோட்டத்தில் பதுங்கியிருந்த ஓநாய் ஒன்றை மயக்க மருந்து ஊசி செலுத்தி வலை வீசிப் பிடித்தனர். இதன் மூலம் கடந்த 2 மாதங்களில் 4 ஓநாய்களை வனத்துறையினர்பொறிவைத்து பிடித்துள்ளனர்.
இது குறித்து மாவட்ட வன அலுவலர் ஆகாஷ்தீப் பதாவன் கூறுகையில்: தந்திரமானவை ஓநாய்கள் என்பதால் ஏற்கெனவே எங்கள் பொறியில் சிக்காமல் இருமுறை தப்பிவிட்டன. ஆகவே இம்முறை கூடுதல் எச்சரிக்கையோடு செயல்பட்டோம். குறிப்பிட்ட இடத்தில் பாதுகாப்புப் படையினரின் கவனத்தைக் குவித்து, ஓநாய்களைச் சிக்க வைக்கத் திட்டமிட்டோம். ஆடு ஒன்றை கட்டிப்போட்டு, மயக்க மருந்து ஊசிகள் பூட்டிய துப்பாக்கிகளுடன் தயார் நிலையில் பதுங்கிநின்றோம். இடது கால் பாதத்தில் காயம்பட்ட ஒரு ஓநாய் நொண்டியடித்து ஆட்டை வேட்டையாட வந்தபோது மயக்க மருந்து செலுத்தி, வலை வீசி பிடித்துவிட்டோம்.
அதனை அருகில் உள்ளசரணாலயத்தில் ஒப்படைத்துவிடுவோம். கடந்த இரண்டு மாதங்களில் ஊரை அச்சுறுத்தி வந்த ஓநாய்களில் 4-ஐ பிடித்துவிட்டோம். மீதமுள்ள இரண்டு ஓநாய்களையும் தேடிப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். இவ்வாறு வன அலுவலர் ஆகாஷ்தீப் பதாவன் கூறினார்