இந்தியா

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு புகார் | சிபிஐ, அமலாக்கத் துறை வழக்குகளில் கவிதாவுக்கு ஜாமீன்

செய்திப்பிரிவு

டெல்லி: டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக சிபிஐ, அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்குகளில் பாரத் ராஷ்ட்ர சமிதி மூத்த தலைவர் கவிதாவுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

டெல்லி அரசின் மதுபான கொள்கை மாற்றி அமைக்கப்பட்டதில் பல்வேறு நிதி முறைகேடுகள் நடந்துள்ளதாக அமலாக்கத் துறை, சிபிஐ ஆகியவை வழக்குப் பதிவு செய்து டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், அமைச்சர் மணிஷ் சிசோடியா, பாரத் ராஷ்ட்ர சமிதியின் தலைவர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா உள்ளிட்டோரை கைது செய்தது. இந்த வழக்கில் மணிஷ் சிசோடியாவுக்கு சமீபத்தில் ஜாமீன் வழங்கப்பட்டது. இதையடுத்து அவர் விடுதலையாகி உள்ளார்.

இதன் தொடர்ச்சியாக மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ-யால் கைது செய்யப்பட்டுள்ள கவிதாவுக்கும் உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது. கவிதாவின் ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.ஆர். கவாய் மற்றும் கே.வி. விஸ்வநாதன் அடங்கிய அமர்வு, சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை ஆகிய இரண்டின் வழக்குகளிலும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்குகளில் 493 சாட்சிகள் இருப்பதால் விசாரணையை விரைவில் முடிப்பது சாத்தியமற்றதாக இருக்கும் என்று தெரிவித்துள்ள நீதிபதிகள், அமலக்கத் துறை மற்றும் சிபிஐ இரண்டும் குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்துள்ளதால் கவிதாவை தொடர்ந்து காவலில் வைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளனர்.

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த மார்ச் 15-ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள பஞ்சாரா ஹில்ஸ் இல்லத்தில் இருந்து கவிதாவை அமலாக்கத் துறை கைது செய்தது. அவர் டெல்லி திஹார் சிறையில் இருந்தபோது ஏப்ரல் 11 ஆம் தேதி சிபிஐ கைது செய்தது.

SCROLL FOR NEXT