கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை விழா இந்த ஆண்டு வரும் அக்டோபர் 9-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி தலைநகர் கொல்கத்தா உட்பட முக்கிய நகரங்களில் பிரம்மாண்ட பந்தல்கள் அமைக்கப்பட்டு துர்கா சிலைகள் நிறுவப்பட உள்ளன.
விழாவுக்கான பந்தல்களை அமைக்க மேற்கு வங்க அரசு சார்பில் தலா ரூ.85,000 நிதியுதவி வழங்கப்படுகிறது. இதுகுறித்து ஹூக்ளி நகர துர்கா பூஜை கமிட்டியின் தலைவர் ரினா தாஸ் கூறியதாவது:
கொல்கத்தா ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மாநிலபோலீஸார் முறையாக விசாரணைநடத்தவில்லை. பெண் மருத்துவரின் மரணத்துக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை.
எனவே இந்த விவகாரத்தில் எங்களது எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் மேற்கு வங்க அரசு வழங்கும் நிதியுதவியை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம். பெரும்பாலான துர்கா பூஜைகமிட்டிகளும் இதே முடிவை எடுத்துள்ளன. இவ்வாறு ரினா தாஸ் தெரிவித்தார்.
மற்றொரு துர்கா பூஜை கமிட்டின் தலைநகர் பிரசன்ஜித் பட்டாச்சார்யா கூறும்போது, “பெண் மருத்துவரின் மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும். அதுவரை மாநில அரசின் நிதியுதவியை ஏற்க மாட்டோம்" என்று தெரிவித்தார்.
இதனிடையே துர்கா பூஜை பந்தல் அமைப்பதற்கான நிதியுதவியை பெற்றுக் கொள்ள விரும்புவோர் உடனடியாக சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளை தொடர்பு கொள்ளுமாறு சமூக வலைதளங்கள் வாயிலாக அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் பிரணாய் ராய் கூறும்போது, “கொல்கத்தா பெண் மருத்துவர் கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெரும்பாலான துர்கா பூஜைகமிட்டிகள் அரசின் நிதியுதவியை பெற மறுத்து உள்ளன. ஆனால் மேற்கு வங்க அரசு கட்டாயப்படுத்தி நிதியுதவியை வழங்க முயற்சி செய்து வருகிறது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட கமிட்டிகளுக்கு சமூக வலைதளம் வாயிலாக அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. துர்கா பூஜை விவகாரத்திலும் முதல்வர் மம்தா பானர்ஜி அரசு அரசியலில் ஈடுபடுகிறது" என்று குற்றம் சாட்டினார்.