தேக்கடியில் படகுசவாரி சென்றுவிட்டு கரை திரும்பிய சுற்றுலா பயணிகள். 
இந்தியா

தேக்கடிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

என்.கணேஷ்ராஜ்

குமுளி: தொடர் விடுமுறை காரணமாக தேக்கடிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. தமிழகத்தின் தேனி மாவட்ட எல்லையில் கேரளத்தின் குமுளி அருகே தேக்கடி அமைந்துள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பக பகுதியான இங்கு படகு சவாரி, பசுமை நடை, மலையேற்றம், யானை சவாரி உள்ளிட்ட சுற்றுலா வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக படகு சவாரி மேற்கொள்ள ஏராளமான சுற்றுலா பயணிகள் தேக்கடி வருகின்றனர். தினமும் காலை 7.30, 9.30, 11.15, 1.45, பிற்பகல் 3.30 மணிக்கு படகுகள் இயக்கப்படுகின்றன.

வயநாடு நிலச்சரிவு: கடந்த சில வாரங்களுக்கு முன்பு வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் தேக்கடிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்தது. இதனால் படகு சவாரி எண்ணிக்கை குறைக்கப்பட்டது. போதிய பயணிகள் வராதபோது படகு சவாரி முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் வரும் திங்கள்கிழமை வரை தொடர் விடுமுறை என்பதால் நேற்று சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்தது. படகுகளிலிருந்த இருக்கைகள் முழுமையாக நிரம்பின. பல நாட்களுக்குப் பிறகு பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால் சுற்றுலா சார்ந்ததொழில்கள் மும்முரமடைந்துள்ளன.

இதுகுறித்து சுற்றுலா வழிகாட்டிகள் சிலர் கூறும்போது, ‘‘வரும் திங்கள்கிழமை கிருஷ்ண ஜெயந்தி என்பதால் 3 நாள் தொடர் விடுமுறை வந்துள்ளது. இதனால் கேரளா, தமிழ்நாடு மட்டுமின்றி வடமாநில சுற்றுலா பயணிகளும் அதிக எண்ணிக்கையில் தேக்கடிக்கு வந்துள்ளனர்’’ என்றனர்.

SCROLL FOR NEXT