கொச்சி: கண்ணூரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொண்டர் அப்துல் ஷுக்கூர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 13 பேரை குற்றவாளிகளாக சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அறிவித்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 2 மூத்த தலைவர்கள் உள்ளிட்ட 18 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம், கண்ணபுரம் அருகே கீழாரா பகுதியில், கடந்த 2012-ம் ஆண்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்) தொண்டர் அப்துல் ஷுக்கூர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களான பி. ஜெயராஜன், டி.வி. ராஜேஷ் ஆகியோர் சென்ற வாகனம் தாக்கப்பட்டதற்குப் பழிவாங்கும் வகையில் இந்தக் கொலை நடந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரியில் சிபிஐ குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்தது. அதில் ஜெயராஜன், ராஜேஷ் ஆகியோர் மீது குற்றச் சதி குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இந்த வழக்கில் ஆரம்பத்தில் 33 பேர் குற்றம் சாட்டப்பட்டிருந்தனர். விசாரணையின்போது இருவர் உயிரிழந்ததால், எஞ்சிய 31 பேர் விசாரணையை எதிர்கொண்டனர்.
இந்நிலையில், இந்த வழக்கில், 13 பேர் குற்றவாளிகளாக சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அறிவித்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் கண்ணூர் மாவட்டச் செயலாளர் பி. ஜெயராஜன், முன்னாள் கல்லியாசேரி எம்எல்ஏ டி.வி. ராஜேஷ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட தலைவர் எம்.வி. கோவிந்தனின் மகன் ஷியாம்ஜித் உள்ளிட்ட 18 பேரை நீதிமன்றம் விடுதலை செய்தது.