இந்தியா

மகாராஷ்டிராவில் கனமழைக்கு இதுவரை 13 பேர் பலி - மும்பை நிலவரம் என்ன?

நாசிக்கில் மேகவெடிப்பு எச்சரிக்கை

வெற்றி மயிலோன்

மும்பை: மகாராஷ்டிராவில் பெய்து வரும் கனமழை காரணமாக, கடந்த நான்கு நாட்களில் மழை தொடர்பான பாதிப்புகளால் 13 பேர் உயிரிழந்தனர். நாசிக்கில் நாளை மேகவெடிப்பு ஏற்படக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மகாராஷ்டிராவில் இன்று (திங்கள்கிழமை) கனமழை நீடித்ததால், மாநிலம் முழுவதும் சாலை, ரயில் மற்றும் விமானப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. பலத்த மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் காரணமாக, புனே - மும்பை விரைவுச்சாலை மற்றும் பழைய புனே - மும்பை நெடுஞ்சாலை ஆகிய இரண்டிலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

மும்பையில் மீண்டும் பலத்த மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் 'ஆரஞ்சு' எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த ஐந்து நாட்களில் மும்பையில் வழக்கத்துக்கு மாறாக மிக அதிக மழைப் பொழிவு பதிவாகியுள்ளது.

ஜூலை 1 முதல் சாண்டாக்ரூஸ் வானிலை ஆய்வு மையப் பகுதியில் 805.6 மிமீ மழை பதிவாகியுள்ளது. இது ஜூலை மாதத்தின் சராசரி மழையளவில் சுமார் 94 சதவீதமாகும். அதேவேளையில் கொலாபா பகுதியில் 744.2 மிமீ மழை பதிவாகி, மாத சராசரி அளவை ஏற்கெனவே கடந்துவிட்டது. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கொலாபாவில் ஒரே நாளில் அதிக மழை பெய்ததும் குறிப்பிடத்தக்கது.

பெலாபூர், நவி மும்பை, தானே, கல்யாண், வசாய் மற்றும் பால்கர் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.

கனமழை காரணமாக மன்குர்டில் நான்கு மாடி கட்டிடம் ஒன்று அருகில் இருந்த குடிசை மீது இடிந்து விழுந்ததில் ஐந்து குழந்தைகள் உட்பட ஆறு பேர் உயிரிழந்தனர். மேலும், நகரம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் விழுந்த சம்பவங்கள் பதிவாகின. இதில் மேலும் இருவர் உயிரிழந்தனர்.

பலத்த மழை மற்றும் மணிக்கு 75 கி.மீ வேகத்தில் வீசிய காற்று காரணமாக மனோரி கடற்கரையிலிருந்து 1 கி.மீ தொலைவில் கப்பல் ஒன்று சிக்கிக்கொண்டது.

கனமழை காரணமாக, மும்பையின் சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் இன்று காலை 11:30 மணி வரை 17 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன மற்றும் 217 விமானங்கள் தாமதமாகின என்று விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மும்பை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த மழை மற்றும் பலத்த காற்று வீசும் என்ற முன்னறிவிப்பைத் தொடர்ந்து, மகாராஷ்டிர சட்டப்பேரவையின் இன்றைய நடவடிக்கைகளை ஒத்திவைக்கப்பட்டது.

சட்டப்பேரவை ஒத்திவைக்கப்படுவதற்கு முன்னதாக, பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கிரீஷ் மகாஜன் பேசுகையில், மும்பை மற்றும் அண்டை மாவட்டங்களில் கடந்த நான்கு நாட்களில் மழை தொடர்பான சம்பவங்களில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்தார்.

இது குறித்து அவையில் பேசிய முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், “ஒரு மாதத்துக்கு சராசரி மழைப் பொழிவு வெறும் நான்கு நாட்களிலேயே பதிவாகியுள்ளது. மும்பை மெட்ரோ ரயில் சேவை இயங்குகிறது. ரயில்கள் மற்றும் பேருந்துகள் பெருமளவில் இயக்கப்படுகின்றன.

காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 90 கி.மீ வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி வருகிறது. மேலும் நாசிக்கில் நாளை மேக வெடிப்பு ஏற்படக்கூடும் என்பதற்கான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. நாசிக் நகரம் மற்றும் மாவட்டப் பகுதிகளில் கடுமையான மேக வெடிப்பு நிகழக்கூடும் எனத் தெரிகிறது. இதனால் சுமார் 300 மி.மீ மழைப்பொழிவு பதிவாகலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT