புதுடெல்லி: மாணவர்கள் சிலருக்கு தொலைதூர நகரங்களில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்ததற்காக, முதுநிலை நீட்தேர்வு தேதியை மாற்ற உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வுகடந்த ஜுன் 23-ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் பலபோட்டித் தேர்வுகளில் வினாத்தாள்கசிவு உட்பட பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக புகார் எழுந்த தால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேர்வு நடைபெறுவதற்கு முதல்நாள் முதுநிலை நீட் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது. இந்த தேர்வு தற்போது நாளை நடைபெறவுள்ளது. இந்நிலையில் சிலருக்கு தேர்வு மையங்கள் தொலைதூர பகுதிகளில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால், தேர்வுத் தேதியை மீண்டும் மாற்றக் கோரி உச்ச நீதிமன்றத்தில் 5 மாணவர்கள் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அதில் தேர்வு நடைபெறும் நகரங்கள் குறித்த அறிவிப்பு கடந்த ஜூலை 31-ம் தேதி வெளியிடப்பட்டது என்றும், தேர்வு மையங்கள் கடந்த 8-ம் தேதி அறிவிக்கப்பட்டன. இதில் விண்ணப்பதாரர்கள் பலருக்கு மிகவும் தொலைதூர நகரங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதை சரிசெய்வதற்கு முதுநிலை நீட் தேர்வு தேதி ஒத்திவைக்க வேண்டும் என கூறியிருந்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் 5 பேருக்காக 2 லட்சம் மாணவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்த முடியாது என கூறி முதுநிலை நீட் தேர்வை வேறு தேதிக்கு மாற்ற மறுத்துவிட்டனர்.