செல்போனில் பேசிக்கொண்டு கார் ஓட்டுவது தண்டனைக்குரிய குற்றம் அல்ல என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
செல்போனில் பேசிக்கொண்டே கார், இருசக்கர வாகனங்கள் ஓட்டினால் கேரள போலீஸ் சட்டம் 118 பிரிவு, 118(இ) ஆகியவற்றின் குற்றமாகும். இந்த சட்டத்தின் கீழ் ஒருவர் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து விளைக்கும் நோக்கில் வாகனத்தில் ஓட்டினால், அது தண்டனைக்குரிய குற்றமாகும். அவருக்கு 3 ஆண்டுகள் சிறையும் அல்லது ரூ.10 ஆயிரம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். இந்த நடைமுறை கேரள போலீஸ் சட்டத்தில் உள்ளது.
இந்நிலையில், எர்ணாகுளம், காக்காநாடைச் சேர்ந்த சந்தோஷை செல்போனில் பேசிக்கொண்டே கார் ஓட்டியதாக கேரள போக்குவரத்து போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால், போலீஸாரின் வழகக்குப் பதிவை எதிர்த்து கேரள உயர் நீதிமன்றத்தில் சந்தோஷ்முறையீடு செய்தார்.
இந்த வழக்கின் நீதிபதிகள் ஏ.எம்.ஷபிக், பி.சோமராஜன் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, கடந்த 2014-ம் ஆண்டு நீதிபதி அளித்த தீர்ப்பான, செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டினால் தண்டனைக்குரிய குற்றம் என்று ஒரு நீதிபதி அமர்வு அளித்த தீர்ப்பை நீதிபதிகள் ரத்து செய்தனர்.
ஆனால், இந்த இரு நீதிபதிகளும் தாங்கள் பிறப்பித்த உத்தரவில் செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவது தண்டனைக்குரிய குற்றமாகாது என்று ஒரு நீதிபதிஅமர்வின் தீர்ப்பை ரத்து செய்தனர். செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்தினால்தான் போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, போலீஸ் சட்டத்தில் எந்த இடத்திலும் செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டினால் அது தண்டனைக்குரிய குற்றம் என்று குறிப்பிடவில்லை. ஆதலால், செல்போனில் பேசிக்கொண்ட வாகனம் ஓட்டினால், பிரிவு118ன் கீழ் வழக்குப்பதிவு செய்யத்தேவையில்லை.
செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டியதாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து வழக்கைச் சந்தித்து வருபவர்கள் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தை அணுகி வழக்கை ரத்துசெய்யக் கூறலாம் எனத் தெரிவித்தனர்.
அதேசமயம், கேரள தவிர்த்து பிற மாநிலங்களில், மோட்டார் வாகனச் சட்டம் 1998-ன்படி, அல்லது ஐபிசி 279ன்படி குற்றச்செயலாகும். ஆபத்தான முறையில் வாகனத்தைச் செலுத்துதல் என்ற பிரிவில் ஓட்டுநருக்கு 6 மாதம் சிறைஅல்லது ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படலாம். 2-வது முறையாகக் குற்றத்தை 3 ஆண்டுகளுக்குள் செய்தால், அந்த ஓட்டுநருக்கு 2 ஆண்டுகள் சிறையும், அபராதமாக ரூ.2 ஆயிரம் விதிக்கலாம். மேலும், ஆபத்து விளைவிக்கும் வகையில் வாகனத்தை வேகமாக ஓட்டுபவர்களுக்கு 6 மாதம் சிறையும், ரூ.1000 அபராதமும் விதிக்கப்படும்.
இதற்கிடையே மத்திய அரசு மோட்டார் வாகனச்சட்டத்தை திருத்தம் செய்ய உள்ளது. அதில் செல்போன் பேசிக்கொண்ட வாகனம் ஓட்டு போலீஸிடம் பிடிபட்டால், அவர்களின் உரிமத்தை ரத்து செய்ய திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.