லக்னோ: மசூதிகள், மதரசாக்கள் மற்றும் வக்ஃப் விவகாரங்களில் மத்திய மற்றும் உத்தரப் பிரதேச அரசுகள் பலவந்தமாக தலையிடுவது நாட்டின் அரசியலமைப்புக்கு எதிரானது என்று பகுஜன் சமாஜ்வாதி கட்சித் தலைவர் மாயாவதி சாடியுள்ளார். வக்ஃப் சட்டத் திருத்த மசோதா தொடர்பாக அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி தனது எக்ஸ் தள பக்கத்தில் தொடர்ச்சியாக இந்தியில் வெளியிட்டுள்ள பதிவில், "இன்று மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வக்ஃப் சட்டத் திருத்த மசோதா, சிறப்பான ஆய்வுக்காக நாடாளுமன்ற நிலைக் குழுக்கு அனுப்பிவைக்கப்பட வேண்டும். மசூதிகள், மதரசாக்கள் மற்றும் வக்ஃப் விவகாரங்களில் மத்திய அரசு மற்றும் உத்தரப் பிரதேச அரசு பலவந்தமாக தலையிடுவது, கோயில்கள் மற்றும் மடங்கள் விவகாரங்களில் அதீத ஆர்வம் காட்டுவது போன்றவை நாட்டின் அரசியலமைப்பு மற்றும் அதன் மதச்சார்பற்ற தன்மைக்கு எதிரானதாகும். இதுபோன்ற குறுகிய சுயநல அரசியல் தேவைதானா? அரசு அதன் தேசிய கடமைகளை நிறைவேற்ற வேண்டும்.
காங்கிரஸ் மற்றம் பாஜக மதம் மற்றும் சாதி அரசியலில் ஈடுபட்டு தேர்தல் லாபங்களைப் பெற்று வருகின்றன. ஆனால், தற்போது இடஒதுக்கீடு பாதுகாப்பு, வறுமை ஒழிப்பு, வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம், பின்தங்கியநிலை போன்றவைகளில் கவனம் செலுத்தி உண்மையான தேசபக்தியை நிரூபிக்கும் நேரம் இது. இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள மசோதா மீது எழுந்துள்ள சந்தேகம், எதிர்ப்பு மற்றும் அச்சம் போன்றவை காரணமாக சிறந்த ஆய்வுக்காக அம்மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டியது அவசியமானதாகும். இதுபோன்ற முக்கியமான விஷயங்களில் அரசு அவசரப்படாமல் இருப்பது சிறந்ததாகும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, வக்ஃப் சட்டத் திருத்த மசோதா 2024-ஐ இன்று மக்களவையில் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. வக்ஃப் வாரியங்களில் பெண்களைக் கட்டாயமாகச் சேர்ப்பது உட்பட பொறுப்புக் கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதை இந்த மசோதா நோக்கமாகக் கொண்டிருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா, மத்திய வக்ஃப் கவுன்சில் மற்றும் மாநில வக்ஃப் வாரியங்களில் முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாதவர்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும். வக்ஃப் சொத்துக்கள் மத்திய அரசு இணையதளத்தில் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது. வக்ஃப் சட்டம் கடைசியாக கடந்த 2013-ம் ஆண்டு திருத்தப்பட்டது.