பெங்களூரு: கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது மனைவிக்கு மாற்று நிலம்ஒதுக்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அவர் பதவி விலக கோரி பாஜகவினரும் மஜதவினரும் மைசூருநோக்கி பாதயாத்திரை மேற்கொண்டுள்ளனர். இதில் மத்திய அமைச்சரும் மஜத தலைவருமான குமாரசாமி நேற்று கலந்துகொண்டார்.
அப்போது குமாரசாமி கூறுகையில், “பழங்குடியினர் ஆணையத்தில் ரூ.187 கோடி ஊழல் நடந்ததில் முதல்வர் சித்தராமையாவுக்கு தொடர்பு இருக்கிறது. ஆனால் அதற்கு அமைச்சராக இருந்தநாகேந்திரா பலிகடா ஆக்கப்பட்டுஉள்ளார். அரசு அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்யும் விவகாரத்தில் சித்தராமையாவின் மகன் யதீந்திரா நேரடியாக தலையிட்டுள்ளார். இதேபோல மனைவிக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள 14 வீட்டு மனைகளை ஒதுக்கி ஊழல் செய்துள்ளார்.
சித்தராமையாவை போலவே, துணை முதல்வர் டி.கே.சிவகுமாரும் ஏராளமான ஊழலில் ஈடுபட்டுள்ளார். அதன் மூலமாகவே அவர் கோடிக்கணக்கில் சொத்துகுவித்துள்ளார். டி.கே.சிவகுமார் தொடக்கம் முதலாகவே ஏழைகளின் நிலத்தை அபகரிப்பது, மலைகளை ஆக்கிரமித்து கிரானைட் கற்களை சட்ட விரோதமாக கடத்துவது, அரசு ஒப்பந்தங்களை உறவினர்களுக்கு ஒதுக்குவது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளார். சிவகுமார் சொத்துகளை குவித்தது தொடர்பாக ஆவணங்களை சேகரித்து வருகிறேன்’’ என்றார்.
குமாரசாமி மோசடி பேர்வழி: இதற்கு துணை முதல்வர் டி.கே.சிவகுமார், “எனது சொத்துகள் அனைத்துக்கும் ஆதாரம் இருக்கிறது. இது தொடர்பாக வருமானவரித்துறையும் அமலாக்கத்துறையும் தொடர்ந்த வழக்குகளில் இருந்து விடுதலையாகி உள்ளேன். குமாரசாமியின் இத்தகைய மிரட்டல்களுக்கு அஞ்ச மாட்டேன். அவரது குடும்பத்துக்கு எங்கிருந்து இவ்வளவு சொத்துகள்வந்தன? குமாரசாமி ஆட்சியில்நடந்த ஊழல்களை பட்டியல் போடவா? அடிப்படையில் அவர் ஒரு மோசடி பேர்வழி என்பதை மக்கள் அறிவார்கள்” என்றார்.