புதுடெல்லி: இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் மிருதுன்ஜெய் மொகபத்ரா நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:
நாட்டில் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் மழைப் பொழிவு நீண்டகால சராசரி அளவான 422.8 மி.மீ-ல் 106 சதவீதம்இருக்கும். கடந்த ஜூன் 1-ல் இருந்து இதுவரை 453.8 மி.மீமழை பதிவாகியுள்ளது. இது இயல்பான அளவைவிட 2% அதிகம்.
நாட்டின் பெரும்பாலான இடங்களில் மழைப் பொழிவு இயல்பாகவும், சில இடங்களில் இயல்பைவிட அதிகமாகவும் இருக்கும். வடகிழக்கு, அதையொட்டியுள்ள கிழக்குப் பகுதி, லடாக், சவுராஷ்டிரா மற்றும் கட்ச் பகுதி, மத்தியில் சில பகுதிகளில் மழைப் பொழிவு இயல்பைவிட குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஜூலை மாதத்தில் நாட்டின் மழைப்பொழிவு இயல்பைவிட 9 சதவீதம் அதிகம். மத்தியப் பகுதியில் மழை 33 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது. பருவமழையை நம்பியுள்ள மத்தியப் பகுதியில் நல்ல மழை பெய்துள்ளது. கிழக்கு உத்தர பிரதேசம்,பிஹார், ஜார்க்கண்ட், மேற்குவங்கத்தின் கங்கை ஆற்றுப் பகுதிகள், வடகிழக்கு பகுதிகளில் மழைப் பொழிவு குறைவாக உள்ளது. ஹரியாணா, பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர் ஆகிய பகுதிகளில் மழைப்பொழிவு 35 சதவீதம் முதல் 45 சதவீதம் வரை குறைவாக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஒடிசாவுக்கு மஞ்சள் எச்சரிக்கை: ஒடிசாவில் நேற்று முதல் இன்று வரை கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அங்குல், கட்டாக், சோனேபூர், சம்பல்பூர் உட்பட சில மாவட்டங்களில் 7 முதல் 20 செ.மீ மழை பெய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை: கேரளாவின் பல இடங்களில் வரும் 5-ம் தேதி வரை கன மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களுக்கு நேற்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திரிச்சூர், மலப்புரம் மற்றும் பாலக்காடு ஆகிய பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.