புதுடெல்லி: மக்களவையில் பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா நேற்று பேசியதாவது: எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வயநாடு எம்.பி.யாக இருந்த 1,800 நாட்களில் வயநாட்டின் நிலச்சரிவு, வெள்ளம் தொடர்பான பிரச்சினை களை சட்டப்பேரவையிலோ அல்லது நாடாளுமன்றத்திலோ ஒருமுறைகூட எழுப்பவில்லை.
வயநாட்டில் நிலச்சரிவுக்கான சாத்தியமுள்ள பகுதிகளில் இருந்து 4,000 குடும்பங்களை இடமாற்றம் செய்யுமாறு கடந்த 2020-ல்கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியது. இது தொடர்பாக இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ராகுல் இன்று வரை இந்த பிரச்சினையை எழுப்பவில்லை. பல்வேறு மத அமைப்புகளின் அழுத்தம் காரணமாக சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியவில்லை என்று கேரள வனத்துறை அமைச்சர் சட்டப்பேரவையில் ஒப்புக்கொண்டுள்ளார். இவ்வாறு தேஜஸ்வி சூர்யா கூறினார். இதற்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆட்சேபம் தெரிவித்தால் மக்களவை சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது.
காங்கிரஸ் பதில்: தேஜஸ்வி சூர்யாவின் கருத்து குறித்து காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கூறுகையில், “நெருக்கடியான இந்த நேரத்தில் நாடாளுமன்றத்தில் பேசும் ஒருவர் தேவையின்றி மனிதாபிமானத்தை அரசியலாக்குவது துரதிருஷ்டவசமானது. மீட்புப் பணிகள் முடிவதற்குள் 200-க்கும் மேற்பட்ட உயிர்களை நாம் இழக்க நேரலாம் என அஞ்சப்படுகிறது. நம் நாட்டில் எல்லாமே அரசியல் அல்ல” என்றார்.
முன்னதாக, வயநாடு முன்னாள் எம்.பி.யான ராகுல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி உதவிகளை வழங்கவும், இந்த பேரழிவுகளுக்கு காரணமான அடிப்படை சுற்றுச்சூழல் பிரச்சினைகளை ஆராயவும் அரசுக்கு வலியுறுத்தினார். மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.