இந்தியா

தேவையற்ற செல்போன் அழைப்புகள்: மக்கள் கருத்து தெரிவிக்க காலக்கெடு நீட்டிப்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: மத்திய நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சகம் விடுத்துள்ளசெய்தியில் கூறியிருப்பதாவது: செல்போனில் தேவையற்ற அழைப்புகள், குறுந்தகவல்களை தடுப்பதற்கான வரைவு வழிகாட்டு நெறிமுறைகளுக்கு பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிப்பதற்கான காலக்கெடு கடந்த 21-ம் தேதியுடன் முடிவடைந்து விட்டது.

இதற்கு ஏராளமான ஆலோசனைகள் மற்றும் கருத்துகள் பெறப்பட்டுள்ளன. அவற்றை நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம். இந்நிலையில் வழிகாட்டுநெறிமுறைகளுக்கு பொதுமக்கள் கருத்து தெரிவிப்பதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டுமென பலதரப்பிலிருந்து வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதை ஏற்று இந்தக் காலக்கெடு ஆகஸ்ட் 8-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.

தொலைத் தொடர்பு நிறுவனங்கள், ஒழுங்குமுறை அமைப்புகள் மற்றும் பலதரப்பினரிடம் இருந்து ஆலோசனைகளைப் பெற்ற பின்பு தயாரிக்கப்படும் வரைவு வழிகாட்டுதல்கள், தனிநபர் தகவல் தொடர்பு நீங்கலாக வர்த்தகம் மற்றும் சேவைகள் தொடர்பான தகவல் தொடர்புகளை தனியாக வரையறுக்கும். இந்த வரைவில் பல முக்கிய அம்சங்கள் இடம்பெற்றிருக்கும். டிராய் விதிமுறைகளை மீறும் நிறுவனங்களின் தகவல் தொடர்பு தடைசெய்யப்படும். பதிவு செய்யப்படாத விற்பனையாளர்கள், தனிப்பட்ட எண்களை பயன்படுத்தும் பிரச்சினைக்கு இந்த வழிகாட்டுதல் தீர்வுகாணும். விரும்பத்தகாத வர்த்தக அழைப்புகளிலிருந்து, இது நுகர்வோரை பாதுகாக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT