புதுடெல்லி: குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ அந்தஸ்து உள்ளிட்டபல கோரிக்கைகளை வலியுறுத்திமத்திய அரசுக்கு எதிராக கடந்தபிப்ரவரி மாதம் விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுத்தனர். பஞ்சாப்-ஹரியானா இடையேயான ஷம்பு எல்லையில் முற்றுகையிட்ட விவசாயிகளை முடக்கும்வகையில் ஷம்பு எல்லையை ஹரியானா அரசு மூடியது.
ஹரியானா அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக விவசாயிகள் அம்மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த நீதிமன்றம், ஒரு வாரத்தில் ஷம்பு எல்லையை திறக்கஉத்தரவிட்டது. ஆனால், இந்தஉத்தரவுக்கு எதிராக ஹரியானாஅரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.
இதுதொடர்பான வழக்கு நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் உஜ்ஜல் புயான் அடங்கி அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
விவசாயிகளுக்கும், அரசுக்கும் இடையே நம்பிக்கை குறைபாடு உள்ளது. விவசாயிகளின் கருத்தைகேட்க நீங்கள் சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இல்லையெனில் அவர்கள் ஏன் டெல்லியை முற்றுகையிட விரும்புகிறார்கள். நீங்கள் இங்கிருந்து அமைச்சர்களை அனுப்புகிறீர்கள். அவர்களின் எண்ணம் உயர்ந்ததாக இருந்தபோதிலும் இருவருக்கும் இடையில் நம்பிக்கை குறைபாடு உள்ளது. விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு சாத்தியமான தீர்வைகண்டறிவதற்காக, எந்தவித சார்புத்தன்மையும் அற்ற தலைசிறந்த நபர்களை உள்ளடக்கிய நடுநிலையான நடுவர் குழுவை ஏன் பேச்சுவார்தைக்கு அனுப்பிவைக்கக்கூடாது. ஒருவாரத்துக் குள் இதுதொடர்பான தகுந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட வேண்டும். அதுவரை தற்போதைய நிலையே தொடர வேண்டும். எந்தவொரு பிரச்சினையும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நெடுஞ்சாலையை பல நாட்கள் அடைத்து வைக்க முடியாது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்தனர்.