மத்திய பிரதேசத்தின் உயர் நீதிமன்ற நீதிபதி மீது பெண் கூடுதல் மாவட்ட நீதிபதி ஒருவர் பாலியல் புகார் அளித்திருக்கிறார். இந்த புகாரை உயர் நீதிமன்ற நீதிபதி மறுத்துள்ள நிலையில், ஒருவேளை இந்த புகார் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனையையும தான் ஏற்க தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இந்திய தலைமை நீதிபதிக்கு புகார் கடிதம் எழுதியுள்ள அப்பெண் நீதிபதி, உயர் நீதிமன்ற நீதிபதி அவரது பாலியல் விருப்பத்திற்கு தன்னை இணங்குமாறு வற்புறுத்தியதாகவும், இதனால் தனது வேலையை ராஜினாமா செய்ய நேர்ந்ததாகவும் குறிப்பிட்டிருக்கிறார். பெண் நீதிபதி, பணியிடங்களில் நடக்கும் பாலியல் வன்முறையை தடுப்பதற்காக மாவட்ட அளவிலான குழுவுக்கு தலைமை தாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த புகாரை முற்றிலும் மறுத்துள்ள உயர் நீதிமன்ற நீதிபதி, “நான் இத்துறை மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். இதன் கௌரவத்தை காப்பதை என் கடமையாகவும் கருதுகிறேன். இந்த புகார் தொடர்பாக, என் மீதான விசாரணையை நடத்தலாம். என் மீதான புகார் நிரூபிக்கப்படுமானால், நான் மரண தண்டனையையும் ஏற்க தயார்”, என்று தெரிவித்துள்ளார்.