சுவிட்சர்லாந்து வங்கிகளில் கருப்புப் பணத்தை பதுக்கி வைத்திருக்கும் இந்தியர்களின் விவரங்களை சேகரிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
சுவிஸ் அரசின் உயர் அதிகார அமைப்பான பெடரல் கவுன்சில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் வங்கி வாடிக்கையாளர்கள் குறித்த விவரங்களை வெளியிடும் வங்கிகள் மீது அபராதம் விதிப்பது உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுவிஸ் வங்கி களில் பெருமளவில் பணம் வைத் திருக்கும் 700 இந்தியர்களின் விவ ரம் வெளியாகியுள்ளது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள சுவிஸ் அரசு, அது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட பட்டியல் இல்லை. ஏனெனில் சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்திருப்போர் விவ ரத்தை வெளியிட சட்டம் அனுமதிப் பதில்லை என்று கூறியுள்ளது.
இந்தியாவில் வரி ஏய்ப்பு செய்து பதுக்கிய கருப்புப் பணத்தை பண முதலைகள் பலர் சுவிஸ் வங்கி களில் அவற்றை போட்டு வைத்துள்ளனர். அவர்கள் தொடர்பான விவரங்களை வெளியிட வேண்டுமென்று இந்திய அரசு சுவிட்சர்லாந்து அரசுக்கு ஏற்கெனவே கடிதம் எழுதியுள்ளது.
சுவிட்சர்லாந்தில் உள்ள எச்எஸ்பிசி வங்கியில் கணக்கு வைத்துள்ள இந்தியர்களின் பட்டியல் பிரான்ஸ் அரசு மூலம் இந்தியாவுக்கு கிடைத்தது. இரு நாடுகளுக்கு இடையே உள்ள விவரங்கள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியாவிடம் இந்த பட்டியலை பிரான்ஸ் அளித்தது. 2011-ம் ஆண்டு எச்எஸ்பிசி வங்கியில் பணியாற்றி அதிருப்தியில் இருந்த பணியாளர் ஒருவர் இந்த விவரங்களை ரகசியமாக சேகரித்து கசிய விட்டார்.