விபத்து ஏற்படுத்திய கார் 
இந்தியா

சிறுவன் ஓட்டிச் சென்ற கார் மோதி இறந்தவரின் பெற்றோருக்கு ரூ.1.98 கோடி வழங்க உத்தரவு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்லி சிவில் லைன்ஸ் பகுதியில் கடந்த 2016 ஏப்ரல் 4-ம் தேதி அதிவேகமாக வந்த கார் மோதியதில் சித்தார்த் சர்மா (32) என்பவர் உயிரிழந்தார். இது அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது.

அதில் நூடுல்ஸ் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு புறப்பட்ட சித்தார்த் சர்மா, இருபுறமும் பார்த்துவிட்டு சாலையை கடப்பதும் திடீரென சாலையில் கார் வந்தவுடன் தப்பிக்க முயல்வதும் தெரிகிறது. எனினும், கார் அவர் மீது மோதி அருகில் இருந்த நடைபாதை மீது ஏறி, டயர் வெடித்து நின்றது. இதையடுத்து காரில் இருந்து சிறுவர்கள் தப்பி ஓடுவது தெரிகிறது.

இந்த வழக்கை மோட்டர் வாகன விபத்துகளுக்கான தீர்ப்பாயம், விசாரித்து வந்தது. இதில் சித்தார்த் சர்மாவின் பெற்றோருக்கு ரூ.1.21 கோடி இழப்பீடும் ரூ.77.67 லட்சம் வட்டியும் சேர்த்து மொத்தம் ரூ.1.98 கோடியை 30 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் சிறுவன் கார் ஓட்டுவதை தடுக்கத் தவறியதால் விபத்துக்கு சிறுவனின் தந்தையே பொறுப்பு என தீர்ப்பாயம் கூறியது. சிறுவன் காரை எடுக்கும்போது அவர் வீட்டில் இருந்ததையும் சுட்டிக்காட்டியது.

சிறுவனின் தந்தை பணியாற்றும் நிறுவனத்தின் பெயரில் அந்த கார் பதிவு செய்யப்பட்டிருந்ததால் அந்த நிறுவனத்திடம் இருந்து இழப்பீட்டு தொகையை இன்சூரன்ஸ் நிறுவனம் திரும்பப் பெறலாம் என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT