ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் தலைவரும் பிஹார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாபின் திருமணம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
பெரும் புள்ளி வீட்டின் விசேஷம் என்பதால், பிரம்மாண்டங்களுக்கு இடையே சில சர்ச்சைகளும் ஏற்பட்டது. திருமணத்துக்கு முந்தைய நாள் லாலுவின் வீடு அமைந்துள்ள பகுதியில் வைக்கப்பட்டிருந்த போஸ்டர் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
மணமகன் தேஜ் பிரதாப் சிங்கை சிவனாகவும் மணமகள் ஐஸ்வர்யா ராயை பார்வதியாகவும் உருவகப்படுத்தி போஸ்டர் அடிக்கப்பட்டுள்ளது. அந்தப் போஸ்டரில் "இன்று திருமண விழா காணும் எங்கள் அண்ணன் தேஜ் பிரதாப்புக்கும் அண்ணி ஐஸ்வர்யா ராய்க்கும் மனமார்ந்த வாழ்த்துகள்' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியினர் என்னவோ இந்த போஸ்டரைக் கொண்டாடத்தான் செய்தனர். ஆனால், ட்விட்டர் போன்ற சமூகவலைதளங்களில் மக்கள் கடும் விமர்சனத்தை முன்வைத்தனர். லாலுவுக்கு ஊழல் வழக்கில் தண்டனை வழங்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி, ஊழல் வழக்கில் சிக்கியவரின் குடும்பத்தினரை இப்படி கடவுளரைப் போல் சித்தரித்திருப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
இந்த திருமண நிகழ்ச்சியில் பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் தொடங்கி ஏராளமான அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொள்ள லாலுவுக்கு மூன்று நாட்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது. மேலும், மருத்துவ சிகிச்சையை காரணம் காட்டி லாலு 6 வாரம் பெயிலும் வாங்கியுள்ளார். லாலுவின் வருகை திருமண வீட்டின் மகிழ்ச்சியை இரட்டிப்பு ஆக்கியிருந்தது.