விஜயவாடா: ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் 2 ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 5 பேர் மீது குண்டூர் மாவட்ட போலீஸார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஆளும் தெலுங்கு தேசம் கட்சியின் (டிடிபி) உண்டி தொகுதி எம்எல்ஏ ரகுராம கிருஷ்ணம் ராஜு அளித்த புகாரின் பேரில் ஜெகன், முன்னாள் டிஜிபி (புலனாய்வு) பிஎஸ்ஆர் ஆஞ்சநேயலு, முன்னாள் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (சிஐடி) பி.வி.சுனில் குமார், ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி ஆர்.விஜய் பால், குண்டூர் அரசு மருத்துவமனை முன்னாள் கண்காணிப்பாளர் ஜி.பிரபாவதி ஆகியோர் மீது குண்டூர் மாவட்டம் நகரம்பேலம் காவல் நிலையத்தில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
எம்எல்ஏ ரகுராம கிருஷ்ணம் ராஜு, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி. ஆவார். கட்சித் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக முதல்வர் ஜெகனை விமர்சித்து வந்தார்.
இந்நிலையில் ஜெகன் உள்ளிட்ட 5 பேர் மீதும் கொலை முயற்சி, போலீஸ் காவலில் சித்தரவதை, கிரிமினல் சதி போன்ற குற்றச்சாட்டுகளை எம்எல்ஏ சுமத்தியுள்ளார். இதன் அடிப்படையில் இந்திய தண்டனை சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.