புதுடெல்லி: காஷ்மீர் கதுவா பகுதியில் தீவிரவாத தாக்குதலுக்கு உள்ளானராணுவத்தினர் பல மணி நேரம்எதிர்த்து போராடியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் மச்செடி-பில்லாவெர் என்ற இடத்தில் இரண்டு ராணுவ லாரிகள் கடந்த திங்கள்கிழமை மாலை 3.30 மணியளவில் வந்தன. ஒருகுறுகலான சாலை திருப்பத்தில் ராணுவ லாரிகள் திரும்பும்போது, எதிர்திசையில் அடர்த்தியான மலைப் பகுதியில் மறைந்திருந்த தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் திடீர் தாக்குதல் நடத்தினர். அப்போது சில வீரர்கள் குண்டு காயங்கள் அடைந்தாலும், ராணுவ லாரியில் பயணம் செய்த மற்ற வீரர்கள் உடனடியாக பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். அங்கு தீவிரவாதிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே பல மணி நேரம் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதனால் அந்த இடமே போர்க்களம் போல் காட்சியளிக்கிறது. எங்கு பார்த்தாலும் ரத்தக் கறை, குண்டுகளின் காலி குப்பிகள், வீரர்களின்ஹெல்மெட் என சிதறிக்கிடக்கின்றன. அங்கு 300 மீட்டர் இடைவெளியில் நிறுத்தப்பட்டிருந்த 2 ராணுவ லாரிகள் துப்பாக்கி குண்டுகளால் துளைக்கப்பட்டுள்ளன. அதன் ஜன்னல்கள் நொறுங்கியுள்ளன. டயர்கள் பஞ்சாராகி உள்ளன.
தீவிரவாதிகளை எதிர்த்து ராணுவ வீரர்கள் கடுமையாக போராடியதால், அவர்கள் அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று மறைந்தனர். இந்த சண்டையில் மொத்தம் 5 வீரர்கள் உயிரிழந்தனர். ராணுவ வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தவில்லையென்றால், பாதிப்பு இன்னும் மோசமாகியிருக்கும் என அங்கு ஆய்வு மேற்கொண்ட பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.