நாக்பூர்: மக்களவை தேர்தலில் மகராஷ்டிராவில் உள்ள 48 தொகுதிகளில் 30 தொகுதிகளை மகா விகாஸ் அகாடி கூட்டணி வென்றது. இந்நிலையில், மகாராஷ்டிராவில் உள்ள 288 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது.
இதில் பாஜக (என்டிஏ) கூட்டணியும் சிவசேனா (உத்தவ் அணி), தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்), காங்கிரஸ் உள்ளிட்ட மகா விகாஸ் அகாடி கூட்டணியும் போட்டியிடவுள்ளன.
இதுகுறித்து மாநில காங்கிரஸ் தலைவர் நானா படேல் கூறும்போது, "ஒரு கட்சிக்கு நிர்வாக அமைப்பு இருக்க வேண்டும். அது அனைத்து இடங்களில் பணியாற்ற வேண்டும். அதனால் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட காங்கிரஸ் கட்சி தயாராகும். இதில் தவறு இல்லை. எங்கள் கூட்டணி கட்சிகளும் அதேபோல்தான் தயாராகின்றன. ஆனால் தேர்தலில் மகாவிகாஸ் கூட்டணியாகவே போட்டியிடுவோம்" என்றார்.