இந்தியா

புரி ஜெகந்நாதர் கோயிலின் பொக்கிஷ அறை திறக்கப்படுமா? - ஒடிசா அரசு நியமித்த புதிய குழு இன்று முடிவு

செய்திப்பிரிவு

புவனேஸ்வர்: ஒடிசாவின் புரி நகரில் புகழ்பெற்ற ஜெகந்நாதர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் 11-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது ஆகும். கிழக்கு கங்கை மன்னர் பரம்பரையை சேர்ந்த அனந்தவர்மன் கோயிலை கட்டினார். இவரது தாய் ராஜசுந்தரி, தமிழ்நாட்டின் வீரராஜேந்திர சோழரின் மகள் ஆவார்.

மன்னர் அனந்தவர்மன் உட்பட பல்வேறு மன்னர்கள் புரி ஜெகந்நாதர் கோயிலுக்கு தங்கம், வெள்ளி நகைகளை தானமாக வழங்கினர். இந்த நகைகள் கோயிலுக்குள் அமைந்துள்ள ரத்ன பண்டார் என்ற பொக்கிஷ அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கிறது.

கடந்த நூற்றாண்டில் 1905, 1926, 1978, 1985 ஆகிய ஆண்டுகளில் பொக்கிஷ அறைகள் திறக்கப்பட்டன. 1978-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி பொக்கிஷ அறையில் 149 கிலோ தங்கம், 258 கிலோ வெள்ளி இருப்பதாக ஆவணங்களில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இவை தவிர ஏராளமான தங்க, வெள்ளி நகைகள், வைரக் கற்கள் உள்ளிட்டவை குவிந்து கிடப்பதாகக் கூறப்படுகிறது.

புரி ஜெகந்நாதர் கோயிலின் பொக்கிஷ அறையை திறந்து தங்க, வெள்ளி நகைகளை கணக்கெடுக்க 2018-ம் ஆண்டில் ஒடிசா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி2018-ம் ஆண்டு ஏப்ரல் 4-ம் தேதி 16 பேர் அடங்கிய குழு கோயிலுக்கு சென்றது.

பொக்கிஷ அறையின் சாவி புரிமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும். உயர் நீதிமன்றம் நியமித்த குழு சென்ற போது ஆட்சியர் அலுவலகத்தில் சாவியை காணவில்லை. இதனால் பொக்கிஷ அறையை திறக்க முடியவில்லை. சாவி காணாமல் போனது குறித்து சிறப்பு குழு விசாரணை நடத்தி அன்றைய பிஜு ஜனதா தள அரசிடம் அறிக்கை சமர்பித்தது.

இந்த சூழலில் ஒடிசா உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி அரிஜித் பசயத் தலைமையில் 12 பேர் அடங்கிய குழுவை முந்தைய பிஜு ஜனதா தள அரசு இந்த ஆண்டு தொடக்கத்தில் நியமித்தது.

அண்மையில் நடந்த ஒடிசா சட்டப்பேரவைத் தேர்தலின் போது, பொக்கிஷ அறையின் சாவி எங்கேஎன்று பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார். இந்த விவகாரம் ஒடிசாவில் பாஜக வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணியாக அமைந்தது. கடந்த ஜூன் 12-ம் தேதி முதல்வர் மோகன் சரண் மாஜி தலைமையில் ஒடிசாவில் பாஜக அரசு முதல் முறையாக பதவியேற்றது.

இதைத் தொடர்ந்து ஒடிசா உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி விஸ்வநாத் ராத் தலைமையில் 16 பேர் அடங்கிய புதிய குழு நியமிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து ஒடிசா சட்ட அமைச்சர் பிரித்விராஜ் ஹரிசந்தன் கூறியதாவது:

புதிய குழு ஜூலை 6-ம் தேதி கூடுகிறது. இந்த கூட்டத்தில் புரி ஜெகந்நாதர் கோயிலின் பொக்கிஷ அறையை திறப்பது குறித்து முக்கியமுடிவு எடுக்கப்படும். பொக்கிஷ அறையை சீரமைப்பது, தங்க, வெள்ளி நகைகளை எவ்வாறு கணக்கிடுவது, அவற்றின் தரத்தை எவ்வாறு பரிசோதிப்பது குறித்துவிரிவான ஆலோசனை நடத்தப்படும். இவ்வாறு அமைச்சர் பிரித்விராஜ் ஹரிசந்தன் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT