பாட்னா: பிஹாரில் கடந்த 2 வாரங்களாக கனமழை பெய்துவரும் நிலையில் சிவான், சரண், மதுபானி, அராரியா, கிழக்கு சம்பரன், கிஷன்கஞ்ச் ஆகிய மாவட்டங்களில் கடந்த 15 நாட்களில் 10 பாலங்கள் இடிந்து விழுந்தன. மாநிலத்தின் 10-வது பாலம் கடந்த வியாழக்கிழமை சரண் மாவட்டத்தில் இடிந்து விழந்தது. அம்மாவட்டத்தில் 24 மணி நேரத்தில் இடிந்து விழுந்த 3-வது பாலம் இதுவாகும்.
பாலங்கள் இடிந்து விழும் சம்பங்களை தொடர்ந்து முதல்வர் நிதிஷ் குமார் கடந்த புதன்கிழமை ஆய்வுக் கூட்டம் நடத்தினார். இதில், மாநிலத்தில் அனைத்து பழைய பாலங்களையும் ஆய்வுசெய்து சீரமைக்க வேண்டிய பாலங்களை அடையாளம் காணுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த சம்பவங்கள் தொடர்பாக விசாரணை நடைபெறுவதாக துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி கூறினார்.
இந்நிலையில் பாலங்கள் இடிந்து விழுந்த சம்பவங்கள் தொடர்பாக நீர்வளத் துறையின் 16 பொறியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக பிஹார் அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பிஹார் வளர்ச்சித் துறை செயலாளர் சைதன்ய பிரசாத் கூறும்போது, “இந்த விவகாரத்தை அரசு தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது. பாலங்கள் கட்டிய ஒப்பந்ததாரர்கள் மீதும் அரசு நடவடிக்கை எடுக்க உள்ளது” என்றார்.
இந்த விவகாரத்தில் நிதிஷ் குமார் அரசை எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் விமர்சனம் செய்துள்ளார்.