காங்கிரஸுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
வழக்கறிஞர் மனோகர் லால் சர்மா என்பவர் உச்ச நீதி மன்றத்தில் தொடர்ந்த பொது நல மனுவில் கூறியிருப்பதாவது:
நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சம்பளம் மற்றும் சலுகைகள் சட்டம் 1977-ன் படி, பெரிய கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு மக்களவையில் எதிர்க் கட்சி அந்தஸ்து வழங்கப்பட வேண்டும். ஆனால், மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், காங்கிரஸ் கட்சிக்கு மொத்த எண்ணிக்கையில் 10 சதவீதமான 55 இடங்கள் இல்லாததால், அக்கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்க முடியாது என்று கூறியுள்ளார். இது சட்ட விரோதமானது. எனவே, காங்கிரஸுக்கு எதிர்க் கட்சி அந்தஸ்து வழங்க சபாநாய கருக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இம்மனு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா, நீதிபதிகள் குரியன் ஜோசப், ரோஹின்டன் நரிமன் ஆகியோரடங்கிய அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
‘எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்க வேண்டும் என்று எந்தச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது? எந்தச் சட்டம் மீறப்பட்டுள்ளது?’ என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
வழக்கறிஞர் மனோகர் லால் சர்மா, ‘மக்களவை நடத்தை விதிகளின்படி, பெரும் பான்மை உள்ள கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்க வேண்டும். அந்த நடைமுறை மீறப்பட்டுள்ளது. ‘காங்கிரஸ் கட்சிக்கு 10 சதவீத இடங்கள் இல்லாததால், அக்கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்க வேண்டியதில்லை’ என்று அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்கி, மக்களவை சபாநாயகருக்கு சட்ட விளக்கம் அளித்துள்ளார். இந்த விளக்க நகலை கேட்டால் தர மறுக்கின்றனர்’ என்று வாதிட்டார்.
நீதிமன்றத்துக்கே பிரச்சினை
இதைக் கேட்ட தலைமை நீதிபதி, ‘உங்களுக்கு அந்த நகலை தரும்படி எங்களை உத்தரவிடச் சொல்கிறீர்களா? அரசியல் பிரச் சினைகளில் தலையிடுவது இந்த நீதிமன்றத்தில் பணியல்ல. குறிப்பிட்ட சட்ட விதிமுறை மீறப் பட்டிருந்தால், அதைச் சுட்டிக் காட்டினால் பரிசீலிக்கலாம். குறிப் பாக, மக்களவை சபா நாயகர் சபைக்கு உள்ளே ஒரு முடிவை எடுக்கும்போது, அதை விசா ரணைக்கு உட்படுத்தும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு இல்லை. நாட்டில் பல பிரச்சினை கள் உள்ளன. இதில், நீங்கள் இங்கு கொண்டு வரும் சில பிரச்னைகள் நீதிமன்றத்துக்கே பிரச்னையை ஏற்படுத்தி விடும்’ என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.