புதுடெல்லி: அக்னிவீர் திட்டத்தில் உயிர்த் தியாகம் செய்பவர்களின் குடும்பத்துக்கு எந்தவித உதவியும் செய்யப்படுவதில்லை என்று ராகுல் காந்தி முன்வைத்த குற்றச்சாட்டுக்கு இந்திய ராணுவம் விளக்கமளித்துள்ளது.
கடந்த ஜூலை 1-ம் தேதியன்று குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது, மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசின் அக்னிவீர் திட்டம் குறித்த விமர்சனங்களை முன்வைத்தார். இந்த திட்டத்தில் பணியாற்றும் வீரர்களுக்கு மத்திய அரசு எந்தவித ஓய்வூதியமோ அல்லது தியாகி அந்தஸ்தோ வழங்குவதில்லை என்று குற்றம்சாட்டினார்.
அப்போது குறுக்கிட்ட மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்த திட்டம் குறித்து ராகுல் காந்தி தவறான தகவலை முன்வைப்பதாகவும், அக்னிவீர் திட்டத்தின் கீழ் உயிர்த் தியாகம் செய்யும் வீரர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.1 கோடி வழங்கப்படுவதாக தெரிவித்தார்.
இந்த நிலையில், இன்று (ஜூலை 3) தனது எக்ஸ் சமூகவலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள ராகுல் காந்தி மக்களவையில் அக்னிவீர் திட்டம் தொடர்பாக சிவன் படத்துக்கு முன்னால் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பொய் கூறிவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் அந்த வீடியோவில், ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த பஞ்சாபைச் சேர்ந்த அக்னிவீரரான அஜய் சிங் என்பவரின் தந்தை பேசும் காணொலியையும் ராகுல் காந்தி இணைத்துள்ளார். அதில் பேசும் அவர், “அக்னிவீர் திட்டத்தில் உயிர்நீத்தவர்களின் குடும்பங்களுக்கு எல்லா உதவிகளும் செய்யப்பட வேண்டும் என்ற எங்களின் குரலை ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் ஒலித்திருக்கிறார். அக்னிவீர் திட்டத்தில் ஆள் சேர்ப்பது நிறுத்தப்பட்டு, வழக்கமான ஆள்சேர்ப்பு முறை மீண்டும் நடத்தப்பட வேண்டும்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தியின் இந்த வீடியோ வெளியான இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு இந்திய ராணுவம் தங்கள் அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் ராகுலின் இந்த குற்றச்சாட்டுக்கு விளக்கமளித்துள்ளது. அந்த பதிவில், அக்னிவீரர் அஜய்குமாரின் குடும்பத்துக்கு ரூ.98.39 லட்சம் வழங்கப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.