இந்தியா

கோஷம் எழுப்பிய எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு தண்ணீர் வழங்கிய பிரதமர் மோடி - வீடியோ வைரல்!

செய்திப்பிரிவு

புதுடெல்லி: மக்களவையில் தனது உரையின் இடையே தொடர்ந்து கோஷங்களை எழுப்பி இடையூறு செய்த எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு பிரதமர் மோடி தண்ணீர் வழங்கிய வீடியோ வைரலாகி வருகிறது.

குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி இன்று (ஜூலை 02) 135 நிமிடங்கள் பதிலுரை ஆற்றினார். அப்போது அவரது உரையின் இடையே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலரும் மணிப்பூர், நீட் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு எதிராக தொடர்ந்து கோஷங்களை எழுப்பினர்.

ஒருகட்டத்தில், பிரதமர் மோடி தனக்கு அருகே நின்று கோஷமிட்டுக் கொண்டிருந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலருக்கு ஒரு கிளாஸில் தண்ணீர் வழங்கினார். அதனை எதிர்க்கட்சி எம்.பி. ஒருவர் பிரதமரிடமிருந்து வாங்கி பருகிவிட்டு மீண்டும் தனது கோஷத்தை தொடர்ந்தார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பாஜக ஆதரவாளர்கள் பலரும் இந்த வீடியோவை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர்.

குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி ஆற்றிய பதிலுரையில், “2024 தேர்தலில் காங்கிரஸுக்கு நாட்டு மக்கள் ஓர் ஆணையை வழங்கியுள்ளனர். அந்த ஆணை என்னவென்றால், வாக்குவாதம் முற்றும் போது எதிர்க்கட்சியில் அமர்ந்து கத்திக் கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான். தேர்தலில் காங்கிரஸ் 100-ஐ தாண்டாதது தொடர்ந்து மூன்றாவது முறையாகும். காங்கிரஸின் வரலாற்றில் இது மூன்றாவது பெரிய தேர்தல் தோல்வியாகும்” என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT