ராகுல் காந்தி | கோப்புப்படம் 
இந்தியா

'மோடி உலகில்...' - அவைக்குறிப்பில் நீக்கப்பட்ட தனது கருத்து குறித்து ராகுல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, நேற்று (ஜூலை 1) முதல் முறையாக நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். அப்போது அவர் தெரிவித்த கருத்துகள் சில அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. இந்தச் சூழலில் அது குறித்து அவர் தெரிவித்தது.

“பிரதமர் மோடியின் உலகில் உண்மையை அழிக்கலாம். அதனை மூடி மறைக்கலாம். ஆனால், எதார்த்த உலகில் அப்படி அல்ல. உண்மையை ஒருபோதும் அழிக்க முடியாது. எதைச் சொல்ல வேண்டுமென நான் நினைத்தேனோ அதைத் தான் சொன்னேன். அது தான் உண்மையும் கூட. அவர்களுக்கு வேண்டிய வரையில் எதை வேண்டுமானாலும் அழிக்கலாம். ஆனால், உண்மை உண்மை தான்” என ராகுல் தெரிவித்தார்.

மக்களவை கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன்னர் அவர் இதனை பத்திரிகையாளர்கள் மத்தியில் தெரிவித்தார். முன்னதாக, திங்கட்கிழமை அன்று குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தின் போது தங்களை இந்துக்கள் என்று சொல்லிக்கொள்ளும் பாஜகவினர் வன்முறை, வெறுப்பை மட்டுமே பரப்புகின்றனர் என ராகுல் தெரிவித்தார்.

அக்னி பாதை திட்டம் சார்ந்தும் தனது கருத்துகளை ராகுல் சொல்லி இருந்தார். அதோடு சிறுபான்மையினர் குறித்தும் பேசி இருந்தார். நீட் விவகாரம், விவசாயிகள் பிரச்சினை, அதானி மற்றும் அம்பானி குறித்தும் பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் அக்னி பாதை, அதானி - அம்பானி மீதான விமர்சனம், பாஜக சிறுபான்மையினருக்கு செய்யும் அநீதி போன்ற ராகுலின் கருத்துகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

SCROLL FOR NEXT