இந்தியா

இந்தியாவில் உலகின் பெரிய அருங்காட்சியகம் திறக்கப்படும்: மத்திய அமைச்சர் தகவல்

செய்திப்பிரிவு

ஜோத்பூர்: மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சராக கஜேந்திர சிங் ஷெகாவத் பதவியேற்ற பிறகு முதல்முறையாக அவர் தனது ஜோத்பூர் மக்களவை தொகுதிக்கு நேற்று முன்தினம் சென்றார். ஜோத்பூரில் அவர் கூறியதாவது:

டெல்லியில் சென்ட்ரல் விஸ்டா மறுவடிவமைப்பு திட்டம் நிறைவடைந்த பிறகு 2025-ல் மத்திய அரசு அலுவலகங்கள் இடமாற்றம் செய்யப்படும். இந்த இடமாற்றத்துக்கு பிறகு ரைசினா ஹில்ஸ் வளாகத்தில் உள்ள வடக்கு பிளாக், தெற்கு பிளாக் ஆகியவை அருங்காட்சியகமாக மாற்றப்படும். இது உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகமாக இருக்கும். இது பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் உள்ள லூவ்ரே அருங்காட்சியகத்தை விட கிட்டத்தட்ட 2 மடங்கு இருக்கும்.

இது தொடர்பாக இந்தியா – பிரான்ஸ் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. உலகில் மிகப்பெரிய அருங்காட்சியத்தை உருவாக்குவதில் நானும் பங்கு வகிப்பது பெருமிதம் அளிக்கிறது. இந்த அருங்காட்சியம் 5,000 ஆண்டுகளுக்கும் மேலான இந்தியாவின் வரலாற்றை சொல்லும்.

இந்தியா கையெழுத்திட்டுள்ள உலக பாரம்பரிய குழுவின் கூட்டம் முதல் முறையாக நமது நாட்டில் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. உலக பாரம்பரிய தளங்களின் எண்ணிக்கையில் உலகில் மூன்றாவது இடத்தை இந்தியா பிடித்துள்ளது. இந்த முறை மேலும் ஒரு பாரம்பரிய தளத்தை பெறும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

இவ்வாறு அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கூறினார்.

SCROLL FOR NEXT