இந்தியா

ரியாசி தீவிரவாத தாக்குதல்: காஷ்மீரில் என்ஐஏ சோதனை

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ரியாசி மாவட்டத்தின் பூனி பகுதியில் ஷிவ் கேரியில் இருந்து கத்ராவுக்கு பக்தர்களை ஏற்றிசென்ற பேருந்தின் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் நிலைதடுமாறிய அந்த பேருந்து பல அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஜூன் 9-ம் தேதி நடைபெற்ற இந்த சம்பவத்தில் ஒரு குழந்தை உட்பட 9 உயிரிழந்தனர். 41 பேர் காயமடைந்தனர்.

இந்த தாக்குதல் தொடர்புடைய ஹக்கின் டின் என்ற ஹகம் கான் என்பவர் கடந்த ஜூன் 19-ம் தேதி கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த ரகசிய தகவல்களின் அடிப்படையில் ரஜோரி மாவட்டத்தின் பல இடங்களில் தேசிய புலனாய்வு குழுவினர் (என்ஐஏ) நேற்று விரிவான சோதனையில் ஈடுபட்டனர். ரியாசி தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளுக்கு புகலிடம், ஆயுதங்கள் வழங்கியதன் குற்றச் சாட்டின் பேரில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது

இதுகுறித்து காவல் கண்காணிப்பாளர் (எஸ்எஸ்பி) மோஹிதாசர்மா நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தற்போது கைதாகியுள்ள ஹக்கின் டின், தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்தது மட்டுமல்லாமல் இந்த தாக்குதல் திட்டத்தை எளிதாக நடத்தி முடிப்பதற்கு தேவையான தகவல்களை தந்து உதவியுள்ளார். விசாரணையில் அவர் தந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ரஜோரியில் மேலும் பல இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. அதில்கிடைக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் அடுத்தகட்ட விசாரணை நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT