ஓம் பிர்லா, கே.சுரேஷ் 
இந்தியா

மக்களவை தலைவர் பதவிக்கு இன்று தேர்தல்: பாஜகவின் ஓம் பிர்லா, காங்கிரஸின் கே.சுரேஷ் போட்டி

செய்திப்பிரிவு

புதுடெல்லி: மக்களவை தலைவர் பதவிக்கு ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஓம் பிர்லாவும், இண்டியா கூட்டணி சார்பில் கொடிக்குன்னில் சுரேஷும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். தேர்தல் இன்று நடைபெறுகிறது.

18-வது மக்களவையின் முதல் கூட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாளில் 262 புதிய எம்.பி.க்களுக்கு தற்காலிக மக்களவை தலைவர் மஹதாப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதைத் தொடர்ந்து, 281 எம்.பி.க்கள் நேற்று பதவியேற்றுக் கொண்டனர்.

புதிய மக்களவை தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும், ஒருமித்த கருத்தின் அடிப்படையில் மக்களவை தலைவர் தேர்வு செய்யப்படுவது வழக்கம்.

அந்த வகையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுடன் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார்.

அப்போது, மக்களவை துணை தலைவர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு வழங்க வேண்டும் என்று கார்கே வலியுறுத்தினார். இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் பொதுச் செயலாளர் வேணுகோபால், திமுக எம்.பி. டிஆர்.பாலு ஆகியோர் அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேசினர். அப்போதும் உடன்பாடு எட்டப்படவில்லை.

இந்த சூழலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஓம் பிர்லா நேற்று மக்களவை தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்தார்.

இதைத் தொடர்ந்து, இண்டியா கூட்டணி சார்பில் கேரளாவை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.கொடிக்குன்னில் சுரேஷ் வேட்புமனு தாக்கல் செய்தார்.

இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர்கள் கூறியதாவது: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி: எதிர்க்கட்சிகளுக்கு மக்களவை துணை தலைவர் பதவியை வழங்கினால், ஆளும்கட்சியின் மக்களவை தலைவர் வேட்பாளருக்கு ஆதரவு அளிக்கதயாராக உள்ளோம். ஆனால், எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கு மத்திய அரசு பதில் அளிக்கவில்லை.

இண்டியா கூட்டணி வேட்பாளர் சுரேஷ்: எதிர்க்கட்சிகளுக்கு மக்களவை துணை தலைவர் பதவியை வழங்குவது மரபு. ஆனால், அந்த மரபை ஆளும்கட்சி பின்பற்ற விரும்பவில்லை. மத்திய அரசின் பதிலுக்காக நீண்ட நேரம் காத்திருந்தோம். பதில் கிடைக்காததால்தான் மக்களவை தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்தேன்.

திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜி: மக்களவை தலைவர் பதவி தொடர்பாக காங்கிரஸ் கட்சி எங்களோடு ஆலோசிக்கவில்லை. ஒருதலைப் பட்சமாக முடிவு எடுத்துள்ளனர்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மக்களவை தலைவர் தேர்தல் தொடர்பாக அரசியல் நோக்கர்கள் கூறியதாவது: கடந்த 16, 17-வது மக்களவையில் துணை தலைவர் பதவி காலியாகவே இருந்தது. தற்போதைய மக்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் மக்களவை துணை தலைவர் பதவியை கோருகின்றனர்.

கருத்தொற்றுமை அடிப்படையில் மட்டுமே மக்களவை தலைவர் தேர்வு செய்யப்பட்டு வந்தார். ஒருமித்த கருத்து உருவாகாததால் மக்களவை தலைவர் பதவிக்கு ஜூன் 26-ம் தேதி (இன்று) தேர்தல் நடைபெற உள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 293 எம்.பி.க்களின் ஆதரவும், இண்டியா கூட்டணிக்கு 232 எம்.பி.க்களின் ஆதரவும் உள்ளது. மக்களவையில் இன்று பங்கேற்கும் எம்.பி.க்களில் பாதிக்கும் மேற்பட்டோரின் வாக்குகளை பெறுபவர் மக்களவை தலைவராக தேர்வு செய்யப்படுவார்.

இவ்வாறு அரசியல் நோக்கர்கள் தெரிவித்தனர்.

ஓம் பிர்லாவுக்கு மீண்டும் வாய்ப்பு: கடந்த 2003-ம் ஆண்டில் ராஜஸ்தானின் கோட்டா தெற்கு சட்டப்பேரவை தொகுதியில் இருந்து பாஜக சார்பில் ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டார். கடந்த 2008, 2013-ம்ஆண்டுகளில் அதே சட்டப்பேரவை தொகுதியில் மீண்டும் வெற்றி பெற்றார்.

கடந்த 2014 மக்களவை தேர்தலில் கோட்டா தொகுதியில் இருந்துஎம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். கடந்த 2019-ம் ஆண்டிலும் அதே தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்வானார். அப்போது, மக்களவை தலைவராக பதவி வகித்தார்.

தற்போது நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் கோட்டா தொகுதியில் இருந்து ஓம் பிர்லா தொடர்ந்து 3-வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இன்று நடைபெறும் தேர்தலில் அவர் வெற்றி பெற்றால், தொடர்ந்து 2 முறை மக்களவை தலைவர் பதவியை வகித்தவர் என்ற பெருமையை பெறுவார்.

29 ஆண்டு அனுபவம் மிக்க சுரேஷ்: கடந்த 1989-ம் ஆண்டில் கேரளாவின் அடூர் மக்களவை தொகுதியில் இருந்து காங்கிரஸ் எம்.பி.யாக கொடிக்குன்னில் சுரேஷ் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1991, 1996, 1999-ம் ஆண்டுகளில் அதே தொகுதியில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றார். ஆனால் 1998, 2004-ம் ஆண்டு மக்களவை தேர்தல்களில் அடூர் தொகுதியில் அவர் தோல்வியை தழுவினார்.

கடந்த 2009-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் மாவேலிக்கரா தொகுதியில் வெற்றி பெற்றார். 2014, 2019 தேர்தல்களில் அதே தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். தற்போதைய மக்களவை தேர்தலிலும் அதே தொகுதியில் வெற்றி பெற்றார். சுமார் 29 ஆண்டுகள் எம்.பி.யாக பதவி வகித்துள்ளார்.

SCROLL FOR NEXT