இந்தியா

ரூ.22 லட்சம் கோடி நிதி ஒதுக்க வேண்டும்: மத்திய அரசிடம் அனுமதி கோரியது நெடுஞ்சாலை அமைச்சகம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கான மிகப்பெரிய உத்வேகமாக, நெடுஞ்சாலை மேம்பாட்டு பணிகளுக்கு ரூ.22 லட்சம் கோடி முதலீட்டுக்கான அமைச்சரவையின் ஒப்புதலை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் கோரியுள்ளது.

கடந்த வாரம் நிதியமைச்சகம் உள்ளிட்ட அனைத்து முக்கிய அமைச்சகங்களுக்கும் இந்த திட்டம் தொடர்பான விரிவான அறிக்கை அனுப்பப்பட்டது. அதன்படி, 2031-32-ம் நிதியாண்டுக்குள் சுமார் 30,600 கி.மீ. தூரத்தை உள்ளடக்கிய நெடுஞ்சாலை மேம்பாட்டு திட்டத்துக்கு ரூ.22 லட்சம் கோடி முதலீட்டுக்கு ஒப்புதல் கோரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் 18,000 கி.மீ விரைவுச் சாலைகள் மற்றும் அதிவேக வழித்தடங்கள், நெரிசலை குறைக்க நகரங்களைச் சுற்றி 4,000 கி.மீ. தேசிய நெடுஞ்சாலை மற்றும் சர்வதேச சாலை கட்டுமானமும் அடங்கும். மொத்த முதலீட்டில் 35% தனியார் துறையின் பங்களிப்பாக இருக்கும் என்று தெரிவிக் கப்பட்டுள்ளது.

சாலை மேம்பாட்டு பணிகளை இரண்டு கட்டங்களாக மேற்கொள்ள முன்மொழியப்பட்டுள்ளது. சாலைப் போக்குவரத்துச் செயலர் அனுராக் ஜெயின் தலைமையில் நடைபெற்ற அமைச்சகங்களுக்கு இடையேயான கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள் இதுகுறித்து கூறுகையில், “முதல்கட்ட பணிகளை 2031-32 நிதியாண்டுக்குள்ளும், இரண்டாம் கட்ட பணிகளை 2036-37 நிதியாண்டுக்குள்ளும் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரூ.22 லட்சம் கோடி முதலீட்டில் முதல் கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. திட்ட அமலாக்கத்துக்காக பட்ஜெட் ஒதுக்கீட்டில் ஆண்டுக்கு 10 சதவீதம் நிதி அதிகரிக்கப்பட வேண்டும் என நெடுஞ்சாலை அமைச்சகம் கோரிக்கை விடுத்துள்ளது’’ என்றனர்.

இடைக்கால பட்ஜெட்டில் சாலைப் பணிகளை மேற்கொள்வதற்காக நெடுஞ்சாலைத் துறை அமைச்சகத்துக்கு மத்திய அரசு ரூ.2,78,000 கோடியை ஒதுக்கியது. இது, முந்தைய நிதியாண்டை விட 2.7 சதவீதம் அதிகம்.

ஜிஎஸ்டிஎன் தரவுகளின்படி 2021-22-ம் ஆண்டில் சுமார் 73% சரக்குகள் சாலை வழியாக கொண்டு செல்லப்படுவதாக கூறப்படுகிறது. ரயில்வேயின் பங்கு 23% ஆகும். மேம்பாட்டு பணிகள் நிறைவடைந்தவுடன் தேசிய நெடுஞ்சாலை வலையமைப்பில் லாரிகளின் சராசரி பயண வேகம் 57 கிலோ மீட்டரிலிருந்து 85 கிலோ மீட்டராக உயரும்.

SCROLL FOR NEXT