இந்தியா

நீட் எதிர்ப்பு முதல் ‘ஜெய் ஸ்ரீராம்’ வரை - புதிய எம்.பி.க்கள் பதவியேற்பு நிகழ்வில் கவனம் ஈர்த்தவை!

செய்திப்பிரிவு

புதுடெல்லி: 18-வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் இன்று (திங்கள்கிழமை) தொடங்கியது. குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இடைக்கால சபாநாயகராக பர்த்ருஹரி மஹதாப்புக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து, பர்த்ருஹரி பஹதாப் மக்களவைக்கு வந்து பொறுப்பை ஏற்றுக்கொண்டார். மேலும், புதிய உறுப்பினர்களுக்கு அவர் பதவிப் பிராமணம் செய்து வைத்தார். முதல் உறுப்பினராக பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார். அவரைத் தொடர்ந்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோர் மக்களவை உறுப்பினர்களாக பதவியேற்றுக்கொண்டனர். இந்த நிகழ்வில் கவனம் ஈர்த்தவை:

> புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் சமஸ்கிருதம், இந்தி, டோக்ரி, பெங்காலி, அசாமிஸ், ஒடியா மற்றும் ஆங்கிலம் என பல்வேறு மொழிகளில் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டனர்.

> முதல் உறுப்பினராக பிரதமர் நரேந்திர மோடி இந்தியில் உறுதிமொழி எடுத்துக்கொண்டார். அவர் பதவி ஏற்க வரும்போது ஒரு பக்கம் "ஜெய் ஸ்ரீராம்" பாஜக எம்பிக்கள் முழக்கம் எழுப்பிய வேளையில், எதிர்க்கட்சிகள் தரப்பில் இருந்து அரசியலமைப்பு புத்தகத்தை உயர்த்தி காண்பித்து எதிர்ப்பு தெரிவித்தனர்.

> மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, அன்னபூர்ணா தேவி, ஜோதிராதித்ய சிந்தியா, மனோகர் லால் கட்டார் உள்ளிட்டோர் இந்தியில் உறுதிமொழி கூறி பதவியேற்றனர்.

> மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஒடியா மொழியில் பதவியேற்றார். அவர் பதவியேற்க வரும்போது எதிர்க்கட்சிகள் நீட், நீட் என முழங்கினர். சமீபத்தில் எழுந்த நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவ்வாறு முழக்கம் எழுப்பினர்.

> கேரளாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பாஜக எம்பியான சுரேஷ் கோபி, மலையாளத்தில் உறுதிமொழி எடுத்துக்கொண்டார். பதவியேற்கும் முன்னதாக அவர் கிருஷ்ணா, குருவாயூரப்பா" என்று சைலண்டாக கடவுள்களை உச்சரித்தார்.

> மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான இணை அமைச்சரான ஸ்ரீபாத் யெஸ்ஸோ நாயக் சமஸ்கிருதத்திலும், வடகிழக்கு பிராந்தியத்தின் கல்வி மற்றும் மேம்பாட்டுக்கான இணை அமைச்சர் சுகந்தா மஜும்தார் வங்காள மொழியிலும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

> புனே நாடாளுமன்ற உறுப்பினர் முரளிதர் மொஹோல் மராத்தியிலும், மத்திய அமைச்சர் ஜிதேந்தர் சிங் டோக்ரி மொழியிலும், கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் அசாமி மொழியிலும், விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு தெலுங்கிலும் பதவியேற்றுக் கொண்டனர்.

> ஹெச்.டி.குமாரசாமி கன்னடத்தில் உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.

> கூட்டத் தொடரின் முற்பகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி எம்பிக்களும், பிற்பகுதியில் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் பதவியேற்றனர்.

> கேரளாவைச் சேர்ந்த எம்பிக்கள் பதவியேற்கும் போது வடகரா காங்கிரஸ் எம்பி ஷாபி பரம்பில் அரசியலமைப்பு புத்தகத்தை கையில் ஏந்தியவாறு அரசியலமைப்பு சாட்சியாக உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.

> முன்னதாக, மக்களவை நடவடிக்கைகள் தொடங்குவதற்கு முன், புதிய சபையின் முதல் அமர்வை குறிக்கும் வகையில் அனைத்து உறுப்பினர்களும் சில நொடிகள் அமைதியாக நின்றனர்.

> கடந்த மக்களவையில் பதவியேற்பின்போது உறுப்பினர்கள் இறுதியில் ஜெய் ஸ்ரீ ராம், பாரத் மாதா கி ஜே, அம்பேத்கர் வாழ்க போன்ற கோஷங்களை எழுப்பினர். இன்றைய பதவியேற்பின்போது உறுப்பினர்கள் அப்படியான கோஷங்களை எழுப்பவில்லை.

SCROLL FOR NEXT