கேரளாவில் ‘நோக்கு கூலி’ நடைமுறை ரத்து செய்யப்படுவதாக அந்த மாநில அரசு அறிவித்துள்ளது.
‘நோக்கு கூலி’ என்பது ஒரு துறையில் அத்துறை சார்ந்த சங்கத்தினரை பணியமர்த்தாமல் வேறு வகையில் வேலை செய்ய வேண்டுமென்றால் அந்த கூலியை தொழிலாளர்களுக்கு கொடுத்துவிட வேண்டும். உதாரணமாக, ஒரு நிறுவனம் பொக்லைன் உள்ளிட்ட இயந்திரங்கள் மூலம் பணிகளை மேற்கொள்ளும்போது, அந்த வேலைக்கு எவ்வளவு மனித உழைப்பு தேவைப்படும் என்பதைக் கணக்கிட்டு குறிப்பிட்ட சங்கத்துக்கு கூலியை அளிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட தொழிலாளர்கள் பணியிடத்துக்கு வந்து அமர்ந்து 7 மணி நேரம் வேடிக்கை பார்ப்பார்கள். உணவு இடைவேளையும் எடுத்துக் கொள்வார்கள். இப்படி நோக்குவதற்கான கூலிதான் ‘நோக்கு கூலி’.
இதன் காரணமாக நிறுவனங்களுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டன. இந்த பிரச்சினை தொடர்பாக பல்வேறு தொழிற்சங்கங்களின் தலைவர்களுடன் முதல்வர் பினராயி விஜயன் கடந்த மார்ச் 8-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ‘நோக்கு கூலி’ நடைமுறையை கைவிட தொழிற்சங்கங்கள் ஒப்புக் கொண்டன.
இதைத் தொடர்ந்து தொழிலாளர் தினமான நேற்று நோக்கு கூலியை ரத்து செய்து கேரள அரசு உத்தரவிட்டது. இதனை தொழில் நிறுவனங்கள் வரவேற்றுள்ளன.