இந்தியா

கேஜ்ரிவால் உதவியாளர் தாக்கிய விவகாரம்: ராகுல், உத்தவ், சரத் பவாருக்கு ஸ்வாதி மாலிவால் கடிதம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்லி மகளிர் ஆணைய தலைவராக 8 ஆண்டுகளுக்கு மேல் பதவி வகித்தவர் ஸ்வாதி மாலிவால்.இவர் கடந்த ஜனவரி மாதம் ஆம்ஆத்மி கட்சி சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வானார். இவர் ராகுல், சரத் பவார்,உத்தவ் தாக்கரே, அகிலேஷ் யாதவ் உட்பட இண்டியா கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

டெல்லி மகளிர் ஆணைய தலைவராக நான் பதவி வகித்த காலத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 1.7 லட்சம் புகார்களை கையாண்டுள்ளேன். இந்நிலையில், கடந்த மே 13-ம்தேதி டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் வீட்டுக்கு சென்றிருந்தேன். அப்போது, முதல்வரின் உதவியாளரால் தாக்கப்பட்டேன்.

இந்த விவகாரத்தில் என்னுடைய கட்சியின் தலைவர்களும் தொண்டர்களும் எனக்கு ஆதரவு அளிக்கவில்லை. மாறாக, என்னுடைய நடத்தை குறித்து என் கட்சியினரே தொடர்ந்து விமர்சனம் செய்தனர். எனக்கு எதிரான இந்த பொய் பிரச்சாரம் காரணமாக, எனக்கு பாலியல் மற்றும் கொலை மிரட்டல்கள் வருகின்றன.

எனவே, இதுகுறித்து ஆலோசிக்க உங்களை நேரில் சந்திக்க விரும்புகிறேன். அதற்கான நேரம்ஒதுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.

SCROLL FOR NEXT