பெங்களூரு: பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வன்கொடுமை செய்த பெண் கடத்தப்பட்ட வழக்கில் பிரஜ்வலின் தாயார் பவானி ரேவண்ணாவுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது.
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் முன்னாள் எம்.பி.யுமான பிரஜ்வல்ரேவண்ணா பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து அவரது வீட்டுபணிப்பெண் அவர் மீது பாலியல் வன்கொடுமை புகார் தெரிவித்தார். இவ்வழக்கில் பிரஜ்வல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணை பிரஜ்வலின் தந்தை ரேவண்ணா, தாய் பவானி உள்ளிட்ட 4 பேர் கடத்தி, கொலை மிரட்டல் விடுத்தனர்.
இது தொடர்பாக அந்த பெண் அளித்த புகாரின்பேரில் ரேவண்ணா கைது செய்யப்பட்டு, கடந்த மாதம் ஜாமீனில் வெளியே வந்தார். இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த பவானி ரேவண்ணா ஜாமீன் கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி கிருஷ்ணா எஸ் தீட்ஷித், ‘சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸாரின் விசாரணைக்கு பவானி ரேவண்ணா 3 நாட்கள் ஆஜராகியுள்ளார். போலீஸாரின் 85 கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளதாக அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். எனவே அவருக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கப்படுகிறது.
பவானி ரேவண்ணா எக்காரணம் கொண்டும் மைசூரு, ஹாசன் மாவட்டங்களுக்குள் நுழையக்கூடாது. விசாரணைக்கு தேவைப்பட்டால் போலீஸார் அவரை அங்கு அழைத்துச் செல்லலாம். இடைப்பட்ட நாட்களில் வழக்கு தொடர்புடைய யாரையும் சந்திக்க கூடாது. பாதிக்கப்பட்ட பெண்ணை நேரடியாகவும், மறைமுகமாகவும் அச்சுறுத்தக் கூடாது'' என உத்தர விட்டார்.
பிரஜ்வல் காவல் நீட்டிப்பு: பாலியல் வன்கொடுமை வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா கடந்த மே 31-ம் தேதி கைது செய்யப்பட்டார். அவரிடம் 14 நாட்கள் சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பின்னர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் நேற்று மீண்டும் அவர் பெங்களூரு 42-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நீதிபதி, பிரஜ்வலின் நீதிமன்ற காவலை மேலும் 14 நாட்கள் நீட்டித்து உத்தரவிட்டார். இதையடுத்து அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.