கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நடைபெற்ற குற்றவியல் நீதி அமைப்பு நிர்வாகத்தில் இந்தியாவின் முற்போக்கான பாதை என்ற மாநாட்டில் மத்திய சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் பேசியதாவது:
பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதாமற்றும் பாரதிய சாக்ஷ்ய சட்டம்ஆகிய மூன்று சட்டங்களும் கடந்தஆண்டு டிசம்பரில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அதே மாதத்தில் அந்த சட்டங்களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் பெறப்பட்டது.
இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் சாட்சியச் சட்டங்களுக்கு மாற்றாக மேற்கண்ட மூன்று புதிய சட்டங்களை மத்திய அரசுஉருவாக்கியுள்ளது. தற்போதைய சூழ்நிலையை கணக்கில் கொள்ளும்போது, இந்த மூன்று சட்டங்களிலும் பல புதுமையான யோசனைகள் உள்ளன. இவற்றை அமல்படுத்த தேவையான பயிற்சியை போலீஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியகம் அளித்து வருகிறது. நீதித் துறை அகாடமி, தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களும் அதற்கான பயிற்சிகளை வழங்கி வருகின்றன.
இந்த நிலையில், வரும் ஜூலை 1-ம் தேதி முதல் இந்த மூன்று புதிய சட்டங்களும் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட உள்ளன. மத்தியில் உருவாகியுள்ள கூட்டணி மிகவும் வலிமையான அரசு என்பதால் பொது சிவில் சட்டமும் அமல் படுத்தப்படும்.இவ்வாறு அர்ஜூன் ராம் மேக்வால் பேசினார்.