புதுடெல்லி: கோத்ரா கலவரம், பாபர் மசூதி இடிப்பு குறித்து மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டிய அவசியம் இல்லை என என்சிஇஆர்டி இயக்குநர் தினேஷ் பிரசாத் தெரிவித்துள்ளார்.
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) 12-ம் வகுப்புக்கான திருத்தப்பட்ட அரசியல் அறிவியல் பாடநூலை வெளியிட்டுள்ளது. அதில், அயோத்தி குறித்த பாடம் 4 பக்கங்களில் இருந்து2 பக்கங்களாக குறைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, குஜராத்திலிருந்து பாஜகவினர் ரத யாத்திரை மேற்கொண்டது மற்றும்கரசேவகர்கள் பாபர் மசூதியைஇடித்தது உள்ளிட்ட தகவல்கள்முந்தைய பதிப்பில் இடம்பெற்றிருந்தன.
இந்த தகவல்கள் புதிய பதிப்பில்நீக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, பாட புத்தகங்கள் காவிமயமாக்கப் பட்டுள்ளதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி உள்ளனர்.
இந்நிலையில், இது தொடர்பாக என்சிஇஆர்டி இயக்குநர் தினேஷ்பிரசாத் சக்லானி பிடிஐ நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
பாடத்திட்டத்தை காவிமய மாக்கும் முயற்சி எதுவும் நடைபெறவில்லை. ஒரு விஷயம் காலாவதியாகிவிட்டால் அதை புதுப்பிக்க வேண்டும். மாணவர்களுக்கு உண்மை அறிவை வழங்குவதற்காகத்தான் வரலாற்றைக் கற்பிக்கிறோம், அதை ஒரு சர்ச்சைக்குரிய பிரச்சினையாக மாற்றுவதற்காக அல்ல.
பாடத்திட்டத்தில் செய்யப்படும் மாற்றங்கள் அனைத்தும் உண்மை மற்றும் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டவை. பாபர் மசூதி-ராமஜென்மபூமி வழக்கில் ராமர் கோயிலுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில் அதை பாடத்திட்டத்தில் சேர்ப்பதில் என்ன தவறு உள்ளது.
கோத்ரா கலவரம், பாபர் மசூதி இடிப்பு, 1984-ல் நிகழ்ந்த சீக்கியருக்கு எதிரான கலவரம் குறித்து மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டிய அவசியம்இல்லை.
வெறுப்புணர்வு கூடாது: இதுபற்றி கற்பித்தால் மாணவர்களுக்கு வெறுப்புணர்வுதான் ஏற்படும். இதுவா கல்வியின் நோக்கம்? மாணவ பருவத்தில் கலவரம், வன்முறை பற்றி அவர்களுக்கு சொல்லித் தரத் தேவையில்லை. அவர்கள் வளர்ந்த பிறகு இதைப் பற்றி எல்லாம் படித்து தெரிந்துகொள்ளப் போகிறார்கள். நேர்மறை எண்ணம் கொண்ட சமூகத்தை உருவாக்க நாங்கள் விரும்புகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.