ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தின் பஸ்தர், பிஜாபூர், தந்தேவாடா, சுக்மா உள்ளிட்ட 10 மாவட்டங்களில் நக்சல், மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
இந்த மாவட்டங்களின் வனப்பகுதிகளில் பாதுகாப்புப் படையினரை முன்னேறவிடாமல் தடுக்க தீவிரவாதிகள் ஆங்காங்கே கண்ணிவெடிகளை புதைத்து வைத்துள்ளனர்.
இதில் வனப்பகுதிகளில் வசிக்கும் கிராம மக்கள் சிக்கி உயிரிழப்பதும், உடல் உறுப்புகளை இழப்பதும் அதிகரித்து வருகிறது.
சத்தீஸ்கரின் சுக்மா பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி சுக்கி கடந்த 3 வாரங்களுக்கு முன்பு மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் புதைத்து வைத்திருந்த கண்ணிவெடியில் சிக்கினார். உ டனடியாக அவர் ராய்ப்பூரில் உள்ள எய்ம்ஸ்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிறுமியின் வலது கால் அகற்றப்பட்டது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுமி சுக்கி கூறும்போது, “நான் என்ன தவறு செய்தேன்? யார் கண்ணிவெடியை வைத்தார்கள். அந்த கண்ணிவெடியில் எனது வலது காலை இழந்துவிட்டேன். மீண்டும் கண்ணிவெடியில் சிக்கி விடுவேனா என்று அஞ்சுகிறேன். என்னையும் எனதுகிராம மக்களையும் யார் காப்பாற்றுவார்கள்’’ என்று கண்ணீர் மல்க கேள்வி எழுப்பினார்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: கடந்த மே 26-ம் தேதி சுக்கியும்அவரது தோழிகளும் சுக்மாமாவட்டம், பீமாபுரம் கிராமத்தின் வனப்பகுதியில் இலுப்பை மரத்தின் பழங்களை பறிக்க சென்றனர். அப்போது மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் புதைத்து வைத்திருந்த கண்ணிவெடியில் சிக்கிய சுக்கி வலது காலை இழந்துள்ளார். அவரது தோழிகளுக்கு சிறிய அளவில் காயங்கள் ஏற்பட்டன.
வாகன வசதி இல்லாததால் சுக்கியை சுமார் 10 கி.மீ. தொலைவு தூக்கி சென்றோம். பின்னர் சுமார் 10 கி.மீ. தொலைவு டிராக்டரில் அழைத்துச் சென்றோம். பின்னர் ஆம்புலன்ஸில் 100 கி.மீ. தொலைவு பயணம் செய்து ராய்ப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்தோம்.
26 பேர் படுகாயம்: கடந்த 6 மாதங்களில் மட்டும் கண்ணிவெடி தாக்குதல்களில் 4 கிராமவாசிகள் உயிரிழந்துள்ளனர். பாதுகாப்பு படையை சேர்ந்த 2 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். 26 வீரர்கள் படுகாயமடைந்து உள்ளனர். ஏராளமான விலங்குகளும் உயிரிழந்துள்ளன.
இவ்வாறு சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
550 கண்ணிவெடிகள்: ஓய்வு பெற்ற பிரிகேடியர் பசந்த் பொன்வார் கூறியதாவது:
சத்தீஸ்கரில் நக்சல், மாவோயிஸ்ட் தீவிரவாதிகளை அழிக்க மத்திய, மாநில அரசுகள் அதிதீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கண்ணிவெடிகளை கண்டுபிடிக்க மோப்ப நாய்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு கண்ணிவெடி தாக்குதல் மூலம் 5 பேர் வரை உயிரிழக்கக்கூடும். மோப்ப நாய்கள் உதவியுடன் கடந்த சில மாதங்களில் 550 கண்ணிவெடிகளை கண்டறிந்து அகற்றி உள்ளோம். இதன்மூலம் ஏராளமான உயிர்கள் காப்பாற்றப்பட்டு உள்ளன.
வனப்பகுதிகளில் வசிக்கும் கிராம மக்கள் தீவிரவாதிகளை பார்த்து அஞ்சுகின்றனர். தீவிரவாதிகளின் நடமாட்டம் குறித்து அவர்கள் துணிச்சலாக தகவல் அளித்தால் சத்தீஸ்கர் முழுவதும் இருந்து இடதுசாரி தீவிரவாதிகள் முழுவதுமாக ஒழிக்கப்படு வார்கள்.
இவ்வாறு ஓய்வு பெற்ற பிரிகேடியர் பசந்த் பொன்வார் தெரிவித்தார்.