புதுடெல்லி: டெல்லி குடியரசுத்தலைவர் மாளிகையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 7.15 மணி அளவில் நடைபெறும் விழாவில் நரேந்திர மோடி, 3-வது முறையாக பிரதமராக பதவியேற்றுக் கொள்கிறார்.
இதையொட்டி வழக்கமான நடைமுறையாக மோடி இல்லத்தில் இன்று (ஜூன் 9) தேநீர் விருந்து அளித்தார். இதில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இடம்பெற உள்ளதாக சொல்லப்படும் பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர். இவர்கள் அனைவரும் இன்று மாலை பிரதமருடன் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் மோடியின் புதிய அமைச்சரவையில் பாஜக-வின் மனோகர் லால் கட்டார், சிவராஜ் சிங் சவுகான், சஞ்சய் குமார் மற்றும் ரவ்னீத் சிங் பிட்டு ஆகியோர் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களுடன் தெலங்கானா பாஜக மாநில தலைவர் கிஷண் ரெட்டி, பியூஷ் கோயல், ஜெய்சங்கர், தர்மேந்திர பிரதான் ஆகியோரும் இருந்தனர்.
இந்த தேநீர் விருந்தில் அமித் ஷா, நட்டா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, கிரண் ரிஜிஜூ, ஜோதிராதித்ய சிந்தியா, நிர்மலா சீதாராமன், அஸ்வினி வைஷ்ணவ், மன்சுக் மாண்டவியா, நித்யானந்த் ராய், ஹர்ஷ் மல்ஹோத்ரா, சி.ஆர்.பாட்டீல், ஜித்தன் பிரசாத் ஆகியோரும் பங்கேற்றனர்.
சிவசேனாவின் பிரதாப்ராவ் ஜாதவ், எல்ஜேபி (ராம் விலாஸ்) தலைவர் சிராக் பாஸ்வான், ஆர்எல்டி கட்சியின் ஜெயந்த் சிங், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் குமாரசாமி, ஜித்தன் ராம் மஞ்சி, ராம்தாஸ் அத்வாலே உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் பிரதமர் மோடி சில முக்கிய அறிவுரைகளை வழங்கியதாக தகவல்.
பிரதமர் மோடி பதவியேற்றுக் கொள்ள உள்ள இந்த விழாவில் பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். முன்னதாக, இன்று காலை காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவிடத்தில் பிரதமர் மோடி, மலர் தூவி வணக்கம் செலுத்தினார். தொடர்ந்து புதிய அமைச்சரவை சகாக்களை சந்தித்தார்.
தலைநகர் டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பதவியேற்பு விழாவில் எதிர்க்கட்சிகள் சார்பில் காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.