லக்னோ: ‘‘விஐபி கலாச்சாரத்தை ஒழித்து, மக்களிடம் நெருங்கி பழகி அவர்களின் குறைகளை போக்க வேண்டும்’’ என தனது அமைச்சர்களுக்கு உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவுரை வழங்கியுள்ளார்.
உத்தர பிரதேசத்தில் மொத்தம் உள்ள 80 மக்களவை தொகுதிகளில் 33 இடங்களில் மட்டுமே பாஜக வென்றது. இந்த தோல்வி குறித்து ஆராய அமைச்சரவை கூட்டத்தை முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று கூட்டினார். அப்போது அவர் பேசியதாவது:
அமைச்சர்கள் அனைவரும் விஐபி.,க்கள் போல நடந்து கொள்ளக்கூடாது. மக்களிடம் அடிக்கடி நேரடியாக பழகி அவர்களின் குறைகளை கேட்க வேண்டும். இதுதான் உங்களின் மந்திரம். நமது செயல்பாடுகள் எதிலும் விஐபி கலாச்சாரம் இருக்கக்கூடாது. மக்களுக்காகத்தான் அரசு செயல்படுகிறது.
மக்களின் நலன்தான் மிக முக்கியம். கடைக்கோடியில் உள்ள மக்களின் பிரச்சினைகள் மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு தீர்வு காண வேண்டும். பொது மக்களிடம் குறை கேட்பதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
மத்திய, மாநில அரசின் சாதனைகளை மக்களிடம் பிரபலப்படுத்த வேண்டும். சமூக ஊடகங்களில் அமைச்சர்களின் பங்களிப்பு அதிகளவில் இருக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசினார்.