காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், உத்தரப் பிரதேச பொறுப்பாளருமான அவினாஷ் பாண்டே நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:
மக்களவை தேர்தல் முடிவுகளை தொகுதிவாரியாக காங்கிரஸ் கட்சியின் அரசியல் விவகாரக் குழு ஆய்வு செய்தது. உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி 17 இடங்களில் போட்டியிட்டு 6 இடங்களில் வென்றது. எங்களின் இண்டியா கூட்டணி மொத்தம் 43 இடங்களில் வென்றது. இந்த ஆய்வு கூட்டத்தில் பெண்கள் உரிமை உட்பட 9 முன்மொழிவுகள் நிறைவேற்றப்பட்டன.
ராகுல் காந்தியின் தேசிய நடை பயணம் மக்களிடையே நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் சாசனத்துக்கு ஏற்பட்ட அச்சுறுத்தலுக்கு இடையே, உ.பி. மக்கள் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றியது பாராட்டத்தக்கது. உ.பி.யின் 403 சட்டப்பேரவை தொகுதிகளில் உள்ள மக்களுக்கு நன்றி தெரிவிக்கவும், அவர்களுக்கு காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி கூறியுள்ள தகவல்களை தெரிவிக்கவும் நன்றி யாத்திரை நடத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. வரும் 11-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை இந்த நன்றி யாத்திரை நடத்தப்படும்.
இவ்வாறு அவினாஷ் பாண்டே தெரிவித்தார்.