கோப்புப்படம் 
இந்தியா

சத்தீஸ்கர் என்கவுன்ட்டரில் 7 மாவோயிஸ்ட்டுகள் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

நாராயண்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாதம் மிகப்பெரிய சவாலாக உள்ளது. அந்த மாநிலத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியும் சமமற்ற நிலப்பரப்பும் மாவோயிஸ்ட்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. அவர்களை ஒடுக்க மத்திய, மாநிலஅரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில், நாராயண்பூர், கொண்டேகான், தந்தேவாடா, ஜெக்தால்பூர் மாவட்ட ரிசர்வ் குழுவும் (டிஆர்ஜி) ஐடிபிபி-யின் 45-வது படைப்பிரிவும் இணைந்து நேற்று முன்தினம் இரவு அபுஜ்மாத் பகுதியில் மாவோயிஸ்ட்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த மாவோயிஸ்ட்கள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதையடுத்து, பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்தி உள்ளனர்.

இதுகுறித்து நாராயண்பூர் காவல் கண்காணிப்பாளர் பிரபாத் குமார் கூறும்போது, “அபுஜ்மாத் பகுதியில் பாதுகாப்புப்படையினருக்கும் மாவோயிஸ்ட்களுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. அதன் பிறகு மாவோயிஸ்ட்கள் தப்பி ஓடி விட்டனர். பின்னர் சம்பவ இடத்திலிருந்து 7 மாவோயிஸ்ட்களின் உடலை கைப்பற்றி உள்ளோம்.

மேலும் அங்கிருந்து சில ஆயுதங்களையும் கைப்பற்றி உள்ளோம். தப்பி ஓடிய மாவோயிஸ்ட்களை தேடி வருகிறோம். இந்த சண்டையில் 3 டிஆர்ஜி வீரர்கள் காயமடைந்தனர். அவர்கள் ஹெலிகாப்டர் மூலம் அழைத்து செல்லப்பட்டு, கிழக்கு பஸ்தார்பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்றார்.

SCROLL FOR NEXT