மும்பை: “குற்றம் செய்பவர்களுக்கு நீங்கள் ஆதரவு தெரிவித்தால் நாட்டின் சட்டங்களை மீறி குற்றம் செய்ய அது அவர்களுக்கு ஓர் உந்துதலாக அமையும். அனுமதியின்றி, ஒருவரின் உடலைத் தொட்டு, தாக்குவது உங்களுக்கு சரி என்றால், பாலியல் வன்கொடுமை மற்றும் கொலைக் குற்றத்தையும் நீங்கள் ஆதரிக்கிறீர்கள் என்றே அர்த்தம்” என சிஐஎஸ்எஃப் பெண் காவலருக்கு ஆதரவானவர்களை பாஜக எம்.பி கங்கனா ரனாவத் சாடியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஒவ்வொரு பாலியல் குற்றவாளிக்கும், கொலைகாரருக்கும், திருடருக்கும் குற்றத்தைச் செய்ய உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும், ஏதோ ஒரு காரணம் இருக்கும். எந்தக் குற்றமும் காரணமில்லாமல் நடப்பதில்லை. ஆனாலும், அவர்கள் குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள். குற்றம் செய்பவர்களுக்கு நீங்கள் ஆதரவு தெரிவித்தால் நாட்டின் சட்டங்களை மீறி குற்றம் செய்ய அது அவர்களுக்கு ஓர் உந்துதலாக அமையும்.
ஒருவரின் அந்தரங்கப் பகுதிக்குள் நுழைந்து, அவர்களின் அனுமதியின்றி, அவர்களின் உடலைத் தொட்டு, தாக்குவது உங்களுக்கு சரி என்றால், பாலியல் வன்கொடுமை மற்றும் கொலைக் குற்றத்தையும் நீங்கள் ஆதரிக்கிறீர்கள் என்றே அர்த்தம். காரணம், மேற்கண்ட குற்றங்களிலும் அதுதான் நடக்கிறது.
உங்களின் உளவியல் ரீதியான குற்றத்தன்மைகளை ஆழமாக பார்த்துக் கொள்ளுங்கள். தயவு செய்து யோகா மற்றும் தியானத்தை மேற்கொள்ளுங்கள். இல்லையெனில் வாழ்க்கை கசப்பான மற்றும் சுமை நிறைந்த அனுபவமாக மாறிவிடும். அதிக வெறுப்பு மற்றும் பொறாமைகளை சுமப்பதிலிருந்து உங்களை விடுவித்துக்கொள்ளுங்கள்” என பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, பாஜக எம்.பி.யும் நடிகையுமான கங்கனா ரனாவத்தை கன்னத்தில் அறைந்த மத்திய தொழிலக பாதுகாப்பு படை (சிஐஎஸ்எஃப்) பெண் காவலர் குல்விந்தர் கவுர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதுடன் கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
விவசாயிகளை பற்றி தவறான கருத்துகளை கூறியதற்காகவே ரனாவத்தை கன்னத்தில் அறைந்ததாக விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர் தெரிவித்தார். காவலர் குல்விந்தர் கவுருக்கு ஆதரவாக பலரும் கருத்து தெரிவித்து வந்த நிலையில், கங்கனா இப்பதிவை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.